சினிமா செய்திகள்

வெற்றிமாறன் சிம்பு படத்தின் கதை இதுதான்?

வெற்றிமாறனின் இயக்கத்தில் 2018 இல் வெளியான படம் ‘வடசென்னை’. 80-களின் வடசென்னையையும்,துறைமுகத்தையும் சுற்றி வாழ்ந்த மக்களின் வாழ்க்கையையும், அரசியலையும் இதில் படமாக்கியிருப்பார் வெற்றிமாறன். அன்பு, ராஜன், செந்தில், குணா என நான்கு முக்கிய கதாபாத்திரங்களைக் கொண்ட இந்தக் கதையில் அன்புவாக தனுஷ் நடிக்க, ராஜனாக அமீர் நடித்திருந்தார்.

பல நேர்காணல்களில் வெற்றிமாறன், வடசென்னை முன்னோட்டம், வடசென்னை 2 ஆகியவை குறித்துப் பேசியிருக்கிறார். இதில் வடசென்னை முன்னோட்டம் என்று சொல்லப்பட்டது ராஜன் வகையறா.வடசென்னை படத்தில், வெகு சில நேரமே வந்தாலும் படம் முழுவதையும் தனுஷின் அசுர நடிப்பையும் மீறி ஆண்ட கதாபாத்திரம் ராஜன். அந்த கதாபாத்திரத்தின் கதையை இணையத் தொடராக எடுக்கும் திட்டம் இருப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார்.

‘வடசென்னை’ படமே ராஜனின் கதையில் இருந்துதான் தொடங்கும். தன் மக்களின் அடிப்படை வாழ்வுக்காகவும், தங்கள் நிலத்துக்காகவும் போராட ஆரம்பித்த ராஜன் எப்படி வன்முறை உலகத்துக்குள் போனார், அதிகாரப் போட்டியால் நண்பர்களாலேயே எப்படி கொல்லப்பட்டார் என்பதை ‘வடசென்னை’ படம் பேசியது. இந்தப் படத்தில் ராஜனாகவே வாழ்ந்திருந்தார் அமீர்.‘வடசென்னை’ ராஜனின் 15 வயது முதல் 24 வயது வரையிலான வாழ்க்கையை ‘ராஜன் வகையறா’வில் காட்சிப்படுத்த இருக்கிறார் வெற்றிமாறன் என்று சொல்லப்படுகிறது.

இந்தக்கதையில், சமுத்திரக்கனி உள்பட ராஜனின் நண்பர்களாக ‘வடசென்னை’யில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் இந்த ‘ராஜன் வகையறா’வில் இடம்பெற இருக்கின்றனவாம்.

இதுமட்டும் செய்தியல்ல.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த வாடிவாசல் கைவிடப்பட்டதால், இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதியபடம் ஒன்று விரைவில் தொடங்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் புதியபடம்தான் ராஜன் வகையறா என்று சொல்கிறார்கள்.

வடசென்னையில் ராஜனாக அமீர் நடித்திருந்தார் இப்போது ராஜனாக சிம்பு நடிக்கவிருக்கிறாராம். சிம்புவுடன் விரைவாக ஒரு படம் செய்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டதால் முழுக்க தயாராக இருக்கும் ராஜன் வகையறா திரைக்கதையை அப்படியே பயன்படுத்தத் திட்டமிட்டாராம் வெற்றிமாறன். அதை சிம்புவும் ஏற்றுக்கொண்டாராம்.

இதனால், விரைவில் வெளியாகவிருக்கும் சிம்பு வெற்றிமாறன் படம் குறித்த அறிவிப்பின்போது இதுதான் கதை என்பதையும் வெளிப்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது.

Related Posts