January 22, 2026
சினிமா செய்திகள்

நினைத்ததை நடத்திய சிம்பு – இரசிகர்கள் பெருமிதம்

தக் லைஃப் படம் வெளியானவுடன் சில நாட்களிலேயே அதாவது ஜூன் 15 அல்லது 16 ஆம் தேதி எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார் சிம்பு.அந்தப்படத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூஜை போடப்பட்டுவிட்டது.அப்படத்தில் நாயகியாக கயாடு லோகர், நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானம், இசையமைக்க சாய் அபயங்கர் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர்.

ஆனால்,எதிர்பாராவிதமாக அந்தப்படத்தைத் தயாரிக்கும் டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல்.அதன் காரணமாக அவர்கள் உடனடியாக இந்தப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க முடியாத நிலை.

இதனால் சிம்பு உட்பட எஸ்டிஆர் 49 படக்குழுவினர் அனைவரும் பேரரதிர்ச்சிக்கு ஆளாகினர்.

ஆனால் டக்கென அதிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.ஏற்கெனவே தொடர்பில் இருந்த வெற்றிமாறனை அழைத்து உடனடியாகப் படப்பிடிப்புக்குச் செல்லத் தயாரா? எனக் கேட்டிருக்கிறார் சிம்பு.அவரும் தயார் என்று சொன்னதும் வேகவேகமாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கிவிட்டன.

தக் லைஃப் வெளியீட்டுக்கு முன்பாகவே அதாவது ஜூன் 4 ஆம் தேதியே துபாய் புறப்பட்டுச் சென்றார் சிம்பு.அங்கிருந்தபடியே எல்லா வேலைகளையும் வேகப்படுத்தினார்.

எஸ்டிஆர் 49 படத்துக்காக ஒதுக்கிய தேதிகள் எதுவும் வீணாகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவருடைய முனைப்பு.

நினைத்ததைச் சாதித்தார் சிம்பு.

ஆம், எஸ்டிஆர் 49 படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நாளில் வெற்றிமாறன் சிம்பு படத்துக்கான அறிவிப்பு காணொலியின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.

ஜூன் 15 ஆம் தேதி இரவு துபாயிலிருந்து சென்னை வந்தார் சிம்பு. வரும்போதே நீண்டமுடியை வெட்டி இந்தப்படத்துக்கு ஏற்ற தோற்றத்துடன் வந்திருக்கிறார்.நள்ளிரவு சென்னை வந்த அவர் அடுத்தநாள் அதாவது ஜூன் 16 காலை எட்டுமணிக்கெல்லாம் தொடங்கிய புதிய படத்தின் விளம்பரப்படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த அந்த விளம்பரப்படப்பிடிப்பில் 200 க்கும் மேற்பட்ட துணைநடிகர்களுடன் சிம்பு மற்றும் இயக்குநர் நெல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்போதைக்கு இந்த விளம்பரத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் நெல்சன், தேவைப்பட்டால் படத்திலும் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

வெற்றிமாறன் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த வடசென்னைக்கு முந்தையதான ராஜன் வகையறா திரைக்கதைதான் படமாகவிருக்கிறது என்கிறார்கள்.

எப்படியிருப்பினும் தான் நினைத்தது போலவே எஸ்டிஆர் 49 படப்பிடிப்பு தொடங்க வேண்டிய நாளில் அந்தப்படம் நின்றுவிட்டதே என முடங்கிப் போகாமல் அடுத்தபடத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொண்டார் என்பது அவருடைய இரசிகர்களுக்குப் பெருமிதம் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது என்பதில் மாற்றமில்லை.

Related Posts