விடாமுயற்சி சொன்னபடி வந்துவிடுமா? – திரையுலகினர் ஐயம்
அஜீத், த்ரிஷா,அர்ஜூன்,ஆதவ்,ரெஜினா உட்பட பலர் நடிக்கும் படம் விடாமுயற்சி.மகிழ்திருமேனி இயக்குகிறார்.அனிருத் இசையமைக்கிறார்.லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து இப்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இப்படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் நாளையொட்டி வெளியாகும் என்று முதலில் சொல்லப்பட்டது.
படப்பிடிப்பு மொத்தமாக நிறைவடைந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும்,இன்னும் பத்துநாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறதென்றும் சொல்லப்பட்டது.
அந்தப் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் இப்படம் 2025 பொங்கலுக்கு வெளியாகாது என்றும் அஜீத் நடிக்கும் இன்னொரு படமான குட்பேட்அக்லி படம் பொங்கலையொட்டி வெளியாகும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் நவம்பர் 28 ஆம் தேதி இரவு பதினோரு மணிக்கு, விடாமுயற்சி திரைப்படம் 2025 பொங்கல் வெளியீடு என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அப்படியானால் பாக்கி இருந்த படப்பிடிப்பு நடந்துவிட்டதா? அல்லது இனி படப்பிடிப்பே நடத்தாமல் இருக்கிறவரை அப்படியே வெளியிடப் போகிறார்களா? பொங்கலுக்கு இன்னும் நாற்பது நாட்கள் தாமே இருக்கின்றன.அதற்குள் போஸ்ட் புரொடக்சன் எனப்படும் படப்பிடிப்புக்குப் பின்பான பணிகள் நிறைவடைந்துவிடுமா? அஜீத்தே இன்னும் குரல்பதிவு செய்யவில்லை என்று சொல்கிறார்களே? எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன.
அவற்றிற்கான விடை..
இன்னும் படப்பிடிப்பு நடத்த வேண்டியிருக்கிறது.முதலில் ஏழு முதல் பத்து நாட்கள் வரை என்றிருந்த படப்பிடிப்பை இப்போது மூன்று நாட்கள் நடத்தினால் போதும் என்கிற முடிவுக்கு இயக்குநர் வந்துவிட்டாராம்.அந்த மூன்று நாட்களில் இரண்டு நாட்கள் அஜீத் நடித்தாக வேண்டும் என்பதால் அவருடைய வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
டிசம்பர் எட்டு அல்லது ஒன்பது தேதிகளில் அஜீத் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்தவுடன் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு தயாராகிக் கொண்டிருக்கிறது.இம்முறை எந்த வெளிநாட்டுக்கும் போகாமல் சென்னையிலேயே அரங்கு அமைத்து எடுக்க வேண்டிய காட்சிகளைப் படம்பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஏற்கெனவே பெரும்பகுதிப் படம் தொகுக்கப்பட்டு பெரும்பாலான காட்சிகளுக்குக் குரல்பதிவும் நடந்து முடிந்திருக்கின்றன. இப்போது எடுப்பதை அதோடு இணைத்தால் போதும் என்கிற நிலை. இதனால் இயக்குநர் மகிழ்திருமேனியின் பணிகள் நிறைவடைந்துவிடுகின்றன.
இந்நிலையில், என்னிடம் சொன்னது போல நான் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவேன்.இனி எல்லாம் அனிருத் கையில் இருக்கிறது என்று அவரைக் கைகாட்டி விட்டாராம் இயக்குநர்.
இப்போது அனிருத்தை இழுத்துப் பிடித்து பின்னணி இசை அமைத்துத் தரவேண்டும் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.
அவரும் பின்னணி இசை சேர்த்துக் கொடுத்துவிடுவார்.படம் திட்டமிட்டபடி கண்டிப்பாக வெளியாகிவிடும் என்று தயாரிப்பு நிறுவனம் தரப்பில் உறுதியாகச் சொல்லப்படுகிறது.
சொன்னது சொன்னபடி நடக்கட்டும்.