நிராகரித்த ஜெயம்ரவி கைகொடுத்த அருண்விஜய் – புது இயக்குநரின் சபதம்
தமிழ்த் திரையுலகில் புதிதாகக் கால்பதித்திருக்கும் நிறுவனம் பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.
இந்நிறுவனம் வெளியிட்ட முதல்படம் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்த டிமாண்டி காலனி 2.
அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.முதல்படமே பெரிய வெற்றி நல்ல இலாபம் என்பதால் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்கும் முடிவில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்நிறுவனம் இப்போது வைபவ் கதாநாயகனாக நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் மற்றும் அருண்விஜய் கதாநாயகனாக நடிக்கும் ரெட்டதல ஆகிய படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவற்றில்,வைபவ் நடித்துள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் முழுமையாகத் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கிறது.ரெட்ட தல படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிறுவனம் அடுத்து ஜெயம்ரவியைக் கதாநாயகனாக வைத்து இரண்டு படங்களைத் தயாரிக்கவிருக்கிறது.
அவ்விரண்டு படங்களில் ஒரு படத்தை புது இயக்குநர் அருள் சக்தி முருகன் என்பவர் இயக்குவதாக இருந்தது.இவர் இயக்குநர் ஷங்கரிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இவரிடம் கதை கேட்கவே ஜெயம்ரவி தயாராக இல்லையாம்.அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்க எனக்கு விருப்பமில்லை,ஏற்கெனவே ஓரிரண்டு படங்களாவது இயக்கிய இயக்குநர்கள் இயக்கத்தில் மட்டுமே நடிப்பதென முடிவெடுத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால்,ஜெயம் ரவியிடம் சொல்ல வைத்திருந்த கதையை அருண்விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் அருள் சக்தி முருகன்.அருண் விஜய்க்கு அந்தக் கதை பிடித்துவிட்டதாம்.
அதோடு இதே தயாரிப்பு நிறுவனத்தில் இப்போது ரெட்டதல படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் சம்பள விசயமும் சுமுகமாக முடிந்துவிட்டதாம்.
ஆக, அடுத்து அருண்விஜய் நடிக்கவிருக்கும் படத்தை அருள் சக்தி முருகன் இயக்குகிறார்.பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்கிறது.
பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனச் சொல்லப்படுகிறது.
ஜெயம்ரவி நிராகரித்த வருத்தத்தில் இருந்த அருள் சக்தி முருகனுக்குக் கை கொடுத்திருக்கிறார் அருண் விஜய்.அதனால், என்னை இப்போது வருத்தப்பட வைத்துவிட்டார் ஜெயம்ரவி. இந்தப்படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கி இப்படத்தைத் தவற விட்டுவிட்டோமே என்று அவரை வருத்தப்பட வைப்பேன் என்று சபதமேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறாராம் அருள் சக்தி முருகன்.
அவர் நினைத்தது பலிக்கட்டும்.