காலா வரட்டும் கவலையில்லை – துணிந்து மோதும் அமீர்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கிறது.
ரஜினி படம் வெளியாகும் நேரத்தில் அதற்கு முந்தைய வாரம் மற்றும் அதற்கு அடுத்த வாரம் மற்ற படங்களை வெளியிட யோசிப்பார்கள். ஆனால் இப்போது ரஜினியின் காலா வெளியாகும் அதேநாளில் தன் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் இயக்குநர் அமீர்.
இயக்குநர் அமீரின் உதவியாளர் முத்து கோபால் இயக்கி நடித்துள்ள படம் அச்சமில்லை அச்சமில்லை சாந்தினி நாயகியாக நடித்துள்ளார். ஜெயபிரகாஷ், அருள்தாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை முத்துகோபால் சொந்தமாகத் தயாரித்தார் ஒரு கட்டத்துக்கு மேல் அவரால் படத்தைத் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது தனது குரு அமீரிடம் வந்தார். எடுத்தவரை படத்தைப் பார்த்த அமீர் அதனை தானே தயாரிப்பதாகக் கூறிவிட்டார்.
இந்தப்படம் திருப்பூரில் சாயபட்டறை கழிவுகளால் மக்களும், விவசாயிகளும் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மையமாக கொண்ட படம். படத்திற்கு வலுச் சேர்ப்பதற்காக அமீர் விவசாயிகள் சங்கத் தலைவராக நடித்துள்ளார்.
அமீர் நடித்த காட்சிகள் 15 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம். இந்த வேடத்தில் அவர் புரட்சிகரமான அரசியல் கருத்துகளைப் பேசுகிறார். திருப்பூர் பகுதி விவசாயிகளின் குரலாக ஒலிக்கிறார் அமீர்.
இந்தப்படம்தான் காலாவுடன் மோதும் துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்கம், ஒரு சில விநியோகஸ்தர்கள் உட்பட பலர் அமீரிடம், காலா வெளியாகிற நேரத்தில் உங்கள் படம் வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்களாம். ஆனால் அவரோ, நாங்கள் மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான நற்கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு படம் எடுத்திருக்கிறோம், எனவே இதற்கு மக்கள் நிச்சயம் ஆதரவு தருவார்கள். எனவே நாங்கள் நம்பிக்கையாகப் படத்தை வெளியிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்.











