விமர்சனம்

நடிகையர் திலகம் – திரைப்பட விமர்சனம்

1936 ஆம் ஆண்டு பிறந்து தன்னுடைய 16 ஆவது நடிக்கத் தொடங்கி பல ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை சாவித்திரி.

நடிப்பதோடு நில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகிய அவதரங்களை எடுத்ததால் பெரும் நட்டம், காதல் கணவருடன் கருத்து வேறுபாடு, நம்பியவர்கள் செய்த துரோகம் ஆகியனவற்றால் மனமுடைந்து மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி 45 வயதிலேயே மறைந்து போனவர் சாவித்திரி.

அவருடைய இந்த வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் நடிகையர் திலகம்.

வாழ்க்கையை உள்ளது உள்ளபடி படமாக்கி ஆவணப்படம் போல ஆக்கிவிடாமல், திரைமொழிக்குத் தேவையானவற்றைக் கலந்து திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

பத்திரிகையாளராகப் பணியாற்றும் சமந்தாவும் அதே பத்திரிகையில் புகைப்படக்காரராகப் பணியாற்றும் விஜய்தேவரகொண்டாவும், நடிகை சாவித்திரி கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் அவரைப் பற்றி எழுதப் புறப்படத்தொடங்குவதில் படமும் தொடங்குகிறது.

சாவித்திரியின் வாழ்க்கையில் தன் சொந்த வாழ்க்கையைக் கண்டெடுக்கிறார் ஆசாரமான பிராமணக்குடும்பத்தில் பிறந்த சமந்தா.

அழகான திரைக்கதை மூலம், மிக அழகாக சாவித்திரி வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை வரிசைப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

சாவித்திரியாக நடிப்பதற்காகவே நடிக்க வந்தவர் போல் சிறப்பாக சாவித்திரியை பிரதியெடுத்திருக்கிறார் கீர்த்திசுரேஷ்.

குழந்தைத்தனம், காதல், ஆங்காரம் ஆகிய எல்லாக்குணங்களையும் பிசிறில்லாமல் வெளிப்படுத்தியிருக்கும் கீர்த்திசுரேஷின் கீர்த்தி பெரிதினும் பெரிதாகும்.

ஜெமினிகணேசன் வேடத்தை ஏற்றிருக்கும் துல்கர், மிகப்பொருத்தம். படத்தின் கதையைப் போலவே நடிப்புப் போட்டியில் சாவித்திரியிடம் அவர் பின்தங்குகிறார்.

கீர்த்திக்கு இணையாக சமந்தாவும் சாதித்திருக்கிறார். திக்குவாய் குறையுள்ள அவர் திக்காமல் விஜய்தேவரகொண்டாவை எனக்கு விட்டுக்கொடுத்துவிடு என்று கேட்கும் காட்சி அழகோ அழகு.

தெலுங்கை மையப்படுத்தி படத்தை எடுத்திருப்பதால் சிவாஜி, எம்,ஜி,ஆரையெல்லாம் போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

சாவித்திரி என்றால் நடிகையர்திலகம், பன்முகத் திறமையாளர் என்பதையெல்லாம் தாண்டி அவர் ம்துப் பழக்கத்துக்கு அடிமையாகி வீணாய்ப் போனவர் என்கிற ஒற்றைச் சித்திரம் மட்டுமே தமிழக்த்தில் பிரசித்தம்.

அக்கருத்தைச் சுக்குநூறாக்கி, அவருடைய குழந்தைத்தனம், நடிப்புத் திறமை, அன்புக்கும் உறவுக்கும் கொடுத்த மதிப்பு ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, கடையெழு வள்ளல்கள் போல் கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தமானவர் அவர் என்பதை இந்தப்படம் வெளிப்படுத்தியிருக்கிறது.

Related Posts