விமர்சனம்

கொடை – திரைப்பட விமர்சனம்

ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தும் நாயகன் கார்த்திக் சிங்கா, அந்த இல்லத்துக்குக் கிடைத்த தொகையை மோசடி ஆசாமியிடம் பறிகொடுக்கிறார். அப்பணத்தை அவர்கள் வழியிலேயே சென்று மீட்டெடுக்க முனைவது கொடை படத்தின் மையம்.

இதற்குள் காதல், நகைச்சுவை உள்ளிட்ட பல அம்சங்களையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.

நாயகன் கார்த்திக்சிங்கவுக்கு காதல், சண்டை, பாசம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

நாயகி அனயா புதுமுகம். அமைதியான அழகு. கதைக்குப் பொருத்தமாக இருக்கிறார்.

சிரிக்க வைக்கும் பொறுப்பு ரோபோசங்கருக்கு. சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் அஜய்ரத்தினம், வேடத்தைச் சிறப்பாகச் செய்ய மெனக்கெட்டிருக்கிறார்.

எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மாரிமுத்து, சிங்கமுத்து,கு.ஞானசம்பந்தம், ஆனந்த்பாபு, கே.ஆர்.விஜயா, வைஷாலி தணிகா, கராத்தே ராஜா உள்ளிட்டோர் படத்தில் இருக்கிறார்கள்.

அர்ஜூனன் கார்த்திக் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்கள் தெளிவு. பின்னணிக் காட்சிகளில் குறைவு.

சிபாஷ்கவியின் இசையில் பாடல்கள் கேட்கலாம் பின்னணி இசையும் தாழ்வில்லை.

ராஜா செல்வம் எழுதி இயக்கியிருக்கிறார். திரைக்கதை பலவீனமாக இருக்கிறது. இருபொருள் தரும் தலைப்பு, இளைஞர்களை ஈர்க்கும் கதை ஆகியவை பலம்.

– சிவா

Related Posts