விமர்சனம்

உடன்பிறப்பே – திரைப்பட விமர்சனம்

அண்ணன் தங்கைப் பாசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பல அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதுதான் உடன்பிறப்பே.

ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பதால் அவரைப் பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய அறிமுகக்காட்சியை அமைத்திருக்கிறார்கள். 

குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்.உயிர்களைக் காக்க தா;லியைக் கழற்றும் துணிவு,  மகளைக் கத்தியால் குத்தியவனுக்கும் பணம் கொடுத்து உதவும் கருணை, மகனா? அண்ணன் மகனா? என்ற மிகக்கடின நேரத்தில் எடுக்கும் முடிவு என எல்லா இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார்.

ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். வேட்டி சட்டை முறுக்குமீசை. சிறுநரை என கம்பீரமாக வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல அவர் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் கம்பீரம்தான்.

சர்பத் குடிக்கிறதுன்னா கூட சட்டப்படிதான் குடிக்கணும் என்று சொல்லும் சமுத்திரக்கனி. அழுத்தமான வேடம் அமைதியான  தோற்றம். ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.

சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கும் வேடம். அளவாக நடித்திருக்கிறார்.
மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு சூரிக்கு.வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்.

காவல்துறை ஆய்வாளராக வரும் வேல்ராஜ், வில்லன் கலையரசன், சசிகுமார் மகனாக வருகிற சித்தார்த், ஜோதிகாவின் மகள்  நிவேதிதா சதீஷ், ஆடுகளம் நரேன் ஆகிய அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு நன்று. இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். 

அருகிப்போய்க் கொண்டிருக்கும் பாச உணர்வுகளோடு, கடன்தவணை கட்டாத விவசாயியின் உழுவை வாகனத்தைப் பறித்துச் செல்லும் மார்வாடிக்கு சசிகுமார் நடத்தும் பாடம், நீரை மண்ணுக்குள் தேடாதே வானத்தில் தேடு என்கிற நம்மாழ்வாரின் சொல் ஆகிய சமுதாய அக்கறைகளை அளவோடு கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.

வீட்டுக்கு மட்டுமன்று நாட்டுக்கும் உடன்பிறப்பே.

Related Posts