October 25, 2021
சினிமா செய்திகள்

கமலின் விக்ரம் படப்பிடிப்பு திடீர் இரத்து – காரணம் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ஃபகத்பாசில் உட்பட பலர் நடிக்கும் படம் விக்ரம்.இது கமல் நடிக்கும் 232 ஆவது படம். 2020 செப்டெம்பர் 16 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதன்பின் ராஜ்கமல் நிறுவனமும் அதுகுறித்து செய்தி வெளீயிட்டது.

அதன்பின் கமலின் 67 ஆவது பிறந்தநாளையொட்டி 2020 நவம்பர் 7 அன்று, அப்படத்தின் பெயரும் குறுமுன்னோட்டமும் வெளியிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான படம் விக்ரம். அநதப் பெயரையே இந்தப்படத்துக்கும் வைத்திருக்கிறார்கள்.

“விக்ரம்” படத்தின் படப்பிடிப்பு ஜூலை 16 அன்று தொடங்கியது.கமல், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் முதல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

தொடர்ந்து, காரைக்குடி, புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

இடைவெளி விட்டு விட்டு நடந்து வரும் இந்தப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நேற்று சென்னை திரைப்பட நகரில் தொடங்குவ்தாக இருந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்வோர் அனைவருக்கும் தகவல் சொல்லிவிட்டார்களாம்.

ஆனால், கடைசிநேரத்தில் படப்பிடிப்பு இரத்தாகியிருகிறது.

அதற்குக் காரணம், ஏற்கெனவே படப்பிடிப்பில் கலந்து கொண்டு பணியாற்றிய சண்டைக்கலைஞர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லையாம்.பலமுறை கேட்டும் படக்குழு தரப்பில் சரியான பதில் கிடைக்கவில்லை என்பதால், ஊதியத்தைக் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொள்வோம் என்று அவர்கள் சொல்லிவிட்டதுதான் காரணம் என்கிறார்கள்.

கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் தொழிலாளர்களுக்குச் சம்பளம் தரவில்லை.அதனால் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பு இரத்தாகிவிட்டது என்பது திரையுலகில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

Related Posts