மணிகண்டன் விஜய்சேதுபதி இணையும் இணையத்தொடர் குறித்த ஆச்சரிய செய்தி
‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ ஆகிய படைப்புகளைத் தந்த இயக்குநர் எம்.மணிகண்டன் ஒரு புதிய இணையதளத் தொடரை இயக்கவுள்ளார்.
இத்தொடரில் விஜய்சேதுபதி நடிக்கவிருக்கிறார். அவர் ஏற்கெனவே இந்தியில் இணையதளத் தொடர்களில் நடித்திருக்கிறார்.அவர் தமிழில் இணையத் தொடரில் நடிப்பது இதுவே முதன்முறை.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் எம்.மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது இரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்திருக்கிறது.
இந்தப் புதிய இணையத்தொடரை ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்காக 7 சிஸ் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் பி.ஆறுமுககுமார் தயாரிக்கிறார்.
இந்த இணையத்தொடருக்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்கிறார், சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.
பி.அஜித் குமார் படத்தொகுப்பாளராகவும், இம்மானுவேல் ஜாக்சன் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார்கள்.இதன் ஒலி வடிவமைப்பை அஜயன் கே.அடாத் மேற்கொள்கிறார்.இத்தொடரின் உடை வடிவமைப்பை கவிதா கையாள்கிறார்.
இதன் படப்பிடிப்பு மார்ச் 31 அன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூசையுடன் தொடங்கியது.
இத்தொடருக்காக விஜய்சேதுபதிக்குப் பேசப்பட்டிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சுமார் இருபத்தியிரண்டு கோடி என்று சொல்லப்படுகிறது.
அவர் இரண்டரை மணிநேர திரைப்படங்களில் நடிக்க பத்திலிருந்து பதினைந்துவரை படத்துக்கேற்ப சம்பளம் வாங்கும் விஜய்சேதுபதி பல மணி நேரம் ஒளிபரப்பாகும் இணையத்தொடருக்கு இந்தச் சம்பளம் வாங்குவது ஒரு செய்தியா? எனக் கேட்கலாம்.
இந்தத் தொடரின் மொத்த நீளமும் இரண்டரை மணிநேரம் தானாம். ஐந்து அரைமணி நேரங்கள் ஒளிபரப்பாகும் வண்ணம் இது தயாராகவிருக்கிறதாம். இரண்டரை மணி நேரத் தொடர் என்பதும் இதற்கு 22 கோடி சம்பளம் என்பதும் ஒரு ஆச்சரியம் தரும் செய்திதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.











