திருச்சிற்றம்பலம் – திரைப்பட விமர்சனம்
பாரதிராஜா மகன் பிரகாஷ்ராஜ். பிரகாஷ்ராஜின் மகன் தனுஷ்.
மூன்று ஆண்கள் மட்டும் ஒரு வீட்டில் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் பிரகாஷ்ராஜுன் தனுஷும் பேசிக்கொள்ளமாட்டார்கள். பாரதிராஜாதான் அவர்களுடைய இணைப்புப் புள்ளி.
அப்பாவுக்கும் மகனுக்கும் என்ன சிக்கல்? அதன் விளைவுகள் என்னென்ன? என்பதோடு தனுஷின் வாழ்க்கைத்துணை எப்படி அமைகிறது? என்பதையும் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் திருச்சிற்றம்பலம்.
பழம் பழம் என்று அழைக்கப்படும் தனுஷ், ஓர் உணவுவிநியோகிப்பாளராக இருக்கிறார். அப்பா மீது அபார வெறுப்பைக் காட்டுகிறார், தாத்தாவிடம் பாசத்தைப் பொழிகிறார்.உற்ற தோழி நித்யாமேனனுடன் பழகுவதற்கு ஒர் அளவுகோல் வைத்திருக்கிறார். ராஷிகண்ணா, பிரியாபவானிசங்கர் ஆகியோர் மீது மையல் கொண்டு தவிக்கிறார்.
எல்லா இடங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி நற்பெயர் பெறுகிறார். பயந்தாங்கொள்ளி வேசம் அவருக்குப் பொருந்தாமல் இருக்கிறது.
மிடுக்கான காவல்துறை ஆய்வாளர் வேடத்தில் வரும் பிரகாஷ்ராஜ், தனுஷ் முன் தலைகுனிந்து நிற்கும்போது அவர் நடிப்பு தலைநிமிர்ந்து நிற்கிறது.
தனுஷின் தாத்தாவாக வரும் பாரதிராஜா அசத்தியிருக்கிறார், அவருடைய ஒவ்வொரு அசைவிலும் அனுபவம் மிளிர்கிறது. பேரன் கழுத்தைப் பிடித்து நெரித்துவிட்டுப் போனபின் தலைமுடியைக் கோதி ஓரு அலட்சியப் புன்னகை வீசும் இடத்தில் அவருடைய ஆளுமை தெரிகிறது.
ராஷிகண்ணா, பிரியாபவானிசங்கர் ஆகிய இருவருக்கும் அதிக வேலையில்லை.ஆளுக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள்தான் என்றாலும் அவற்றைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
தனுஷின் தோழியாக வரும் நித்யா மேனன் தான் படத்தின் உண்மையான நாயகன். எல்லாக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து இது போன்றதொரு நட்பு நமக்கு இருந்தால் எப்படி இருக்கும் என்று எல்லோரையும் ஏங்க வைக்கிறார்.
மு.இராமசாமி, முனீஸ்காந்த், ஸ்ரீரஞ்சனி உள்ளிட்டு சின்னச்சின்ன வேடங்களில் நடித்திருப்பவர்களும் இரசிக்கவைத்திருக்கிறார்கள்.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவில் சென்னையும் கிராமமும் சரியாகப் பதிவாகியிருக்கிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் இரசிக்கவைக்கின்றன. பின்னணி இசையிலும் கதைக்குப் பலம் சேர்க்கிறார்.
எழுதி இயக்கியிருக்கிறார் மித்ரன் ஆர்.ஜவகர். கதை பழையது ஊகிக்கக் கூடியது என்றாலும் தனுஷ், நித்யாமேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரிடம் தேர்ந்த நடிப்புகளைப் பெற்று வெற்றி பெருகிறார். அதனால் கதையைத் தாண்டி காட்சிகளில் மனம் ஒன்றிப்போகிறது.
அடிதடி இரத்தம் இல்லாமல் குடும்ப உறவுகள், காதல், நட்பு ஆகியனவற்றின் சிறப்புகளை அழகாக எடுத்துச் சொல்லியிருப்பது திருச்சிற்றம்பலத்தின் பலம்.