எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கொடை திரைப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழா
எஸ்எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா செல்வம் இயக்கத்தில் வளரும் இளம் திறமையாளர்களின் கூட்டு முயற்சியில் ஓர் அழகான படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கொடை’.
இப்படத்தில் கார்த்திக் சிங்கா கதாநாயகனாக நடிக்க, அனயா கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் ரோபோ சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்தினம், போஸ் வெங்கட், சுவாமிநாதன்,ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு அர்ஜுனன் கார்த்திக், படத்தொகுப்பு ஜி.சசிகுமார், கலை இயக்கம் கே.எம்.நந்தகுமார், நடன அமைப்பு தினேஷ், ராதிகா, சண்டைக்காட்சிகள் பீனிக்ஸ் பிரபு உடைகள் பி.ரெங்கசாமி, ஒப்பனை பி.எஸ்.குப்புசாமி
5 பாடல்கள் கொண்ட இந்தப் படத்திற்கு சுபாஷ் கவி இசையமைத்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று(ஆகஸ்ட் 17,2022) நடந்தேறியது.
இவ்விழாவினில் இசையமைப்பாளர் சுபாஷ் கவி பேசியதாவது..,
இந்தப் படத்தில் அதிகபட்சமாக லைவ் சவுண்ட் தான் பயன்படுத்தி இருக்கிறோம். தமிழில் இதுவரை பணிபுரிந்த பல மூத்த இசைக் கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். படத்தின் பாடல் வரிகளை எழுதியவர்களுக்கும், பாடலைப் பாடியவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எங்களுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.
நடிகர் கார்த்திக் சிங்கா பேசியதாவது..,
இசையமைப்பாளருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. அனுபவம் மிக்கவர் போல இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னை இதில் நடிக்க வைக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தார், அது எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. இந்தப் படம் முழுக்க முழுக்கப் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம். படத்தில் எல்லா வித அம்சங்களும் இருக்கின்றன. படம் மிக நன்றாக வந்துள்ளது, நீங்கள் பார்த்து உங்கள் ஆதரவைத் தர வேண்டும் என்றார்.
நடிகை அனயா கூறியதாவது..,
தமிழில் இது என் முதல் படம். நான் இந்தத் திரைப்படம் மூலமாக நிறையக் கற்றுக்கொண்டேன். கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றார்.
நடிகர் ராதாரவி பேசியதாவது..,
இசையமைப்பாளருக்கு முதல் படம் போன்று தெரியவில்லை, அவருடைய இசை ஈர்க்கும் படி உள்ளது. இளைஞர்கள் திரைத்துறைக்கு வந்து ஜெயிக்க வேண்டும். இந்தப் படத்தின் கதாநாயகன் சிறப்பாக நடித்துள்ளார், ரோபோ சங்கர் மிகச்சிறந்த கலைஞன், அவன் பெரிய ஆளாக வரவேண்டும். சிங்கமுத்து என் குடும்பத்தில் ஒருத்தன் அவன் மகன் நடிகனாகியிருப்பது மகிழ்ச்சி. என் குடும்பத்திலிருந்து யாரும் நடிக்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். வாரிசுகள் சினிமாவிற்கு வந்தால் தான் நம் பெயர் நிலைக்கும். நாயகனுக்கு உங்கள் ஆதரவு தேவை. இந்தப் படத்திற்கு உங்களது ஆதரவைக் கொடுத்து படத்தை வெற்றி பெற வையுங்கள் என்றார்.
நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது..,
இந்தப் படத்தில் எனக்கு சிறிய ரோல் என்றாலும், அது நல்ல கதாபாத்திரமாக அமைந்திருந்தது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை வசனங்கள் வாயிலாகவும், நடிப்பு வாயிலாகவும் மெருகேற்ற படக்குழு நிறைய உதவி செய்தனர். படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றன, அவற்றில் சில முக்கிய கதாபாத்திரங்களுடன் நான் நடித்துள்ளேன். படத்தின் நாயகன் கார்த்திக் மிகப்பெரிய நாயகனாக மாற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவு தேவை. எல்லோருக்கும் நன்றி என்றார்.
நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது..,
இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. பாடல்கள் எல்லாம் மிகச்சிறப்பாக வந்துள்ளன. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். கதாநாயகன் கார்த்திக் நடனத்திலும், நடிப்பிலும் மிரட்டலான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் நான் முக்கிய பாத்திரத்தில் வருகிறேன். படம் நன்றாக வந்துள்ளது பார்த்து ஆதரவளியுங்கள் நன்றி என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன் பேசியதாவது..,
படத்தின் பாடல்கள் அனைத்தும் கேட்க இனிமையாக இருந்தது. இசையமைப்பாளருக்கு எனது வாழ்த்துகள். கொடை என்ற டைட்டிலே நன்றாக இருக்கிறது, இந்தக் காலத்தில் யாரும் தமிழில் நல்ல டைட்டில் வைப்பதில்லை, படக்குழுவுக்கு வாழ்த்துகள்.இயக்குநருடைய பணி சிறப்பாக வந்துள்ளது என்பது படத்தின் காட்சிகளைப் பார்த்தாலே தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடையும், அதற்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார்.
தயாரிப்பாளர் அம்மா டி.சிவா கூறியதாவது..,
ஒட்டுமொத்தப் படக்குழுவின் கூட்டு முயற்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.பாஸ்கர் போன்ற சிறந்த நடிகர்களைத் திரையில் பார்ப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தைச் சரியான முறையில் புரமோட் செய்து, மிகப்பெரிய வசூலை படக்குழு ஈட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் எழில் பேசியதாவது..,
படத்தின் டிரெய்லர் ஈர்க்கும் படி அமைந்து இருந்தது. படத்தின் ரீரெக்கார்டிங் கதையோட்டதோடு ஒன்றிப் போய் உள்ளது. இந்தப் படம் வெற்றி பெரும் என்று எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. படக்குழுவினர் உடைய உழைப்பு பாடல்களிலும், டிரெய்லரிலும் நன்றாகத் தெரிகிறது. படம் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்றார்.
படத்தின் இயக்குநர் ராஜா செல்வம் பேசியதாவது..,
மிகப்பெரும் ஜாம்பவான்கள் எங்கள் படத்திற்கு வந்து வாழ்த்தியது மிக மகிழ்ச்சி. இப்படம் ஒரு கூட்டு முயற்சி. பல தடைகளைக் கடந்து படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரவளியுங்கள் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











