அரண்மனை 3 – திரைப்பட விமர்சனம்
ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல்.
எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும் கலந்து சொல்லியிருக்கும் படம் அரண்மனை 3.
அரண்மனைக்கு மின்சாரக்கட்டமைப்பு வேலை செய்ய வரும் ஆர்யாவுக்கு அவ்வரண்மனையின் இளவரசியான ராஷிகண்ணாவின் மீது காதல் என்றொரு கிளைக்கதையும் இருக்கிறது.
பெரும்பாலான படங்களில் கதாநாயகிகள் இருப்பதுபோல் இப்படத்தில் ஆர்யா இருக்கிறார். கட்டுமஸ்தான் உடலுடன் வந்து இரண்டு பாடல்கள் இரண்டு சண்டைகள் போடுகிறார். இடைவேளையின் திடீர் திருப்பத்துக்குக் காரணமாக இருக்கிறார்.
ராஷிகண்ணா உடலழகை வஞ்சகமில்லாமல் காட்டியிருக்கிறார். பயப்படும் காட்சிகளில் பயப்படுவது போல் நடித்திருக்கிறார்.
அரண்மனைக்கு திடீரென வரும் சுந்தர்.சி, அரண்மனையின் பல்லாண்டுகாலச் சிக்கலைத் தீர்க்க ஒரு விசாரணை அதிகாரியின் பாவனையோடு அணுகியிருக்கிறார். அது அவருக்குச் சாலப்பொருத்தம்.
இந்தப்படத்தில் சிரிப்புக்குப் பொறுப்பாக விவேக், யோகிபாபு, மனோபாலா ஆகியோர் இருக்கிறார்கள். முரட்டுசிங்கிள் என்பதற்கு கல்யாணம் ஆன விவேக்கை வைத்து வித்தியாச விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
இம்மூவர் கூட்டணி படத்தை இலகுவாக நகர்த்திச் செல்ல உதவியிருக்கிறது.
ஆண்ட்ரியா, சாக்ஷிஅகர்வால், நளினி, மைனா நந்தினி, சம்பத், வேலராமமூர்த்தி, மதுசூதனராவ், விச்சுவிஸ்வநாத், வின்செண்ட் அசோகன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் கணினி வரைகலைக் காட்சிகளும் குழந்தைகளைக் கவரும். இறுதியில் சிங்கம் வரும் காட்சி சிறப்பு.
சி.சத்யாவின் இசையில் ஐந்துபாடல்கள். ஐந்தும் ஐந்து வகை. கேட்கவும் பார்க்கவும் இனிமையாக அமைந்திருக்கிறது. பின்னணி இசை தேவையான அளவு இருப்பது நிம்மதி.
ஏற்கெனவே வந்த அரண்மனைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்ட கடும் பிரயத்தனப்பட்டிருக்கிறார் சுந்தர்.சி. இருக்கும் பேய்கள் போதாதென்று புதிய பேயை உருவாக்குகிறார்.
நகைச்சுவைகளும், இடைவேளை திருப்பமும், இறுதிக்காட்சியும் படத்துக்குப் பலம்.













