வாத்திக்குப் போட்டியா பகாசூரன் ? – உண்மை என்ன?
பிப்ரவரி 17 ஆம் தேதி தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி படம் வெளியாகவிருக்கிறது.
இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையைப் பெற்ற ல்லித்குமார், எல்லாப்பகுதிகளிலும் வியாபாரம் செய்துவிட்டார்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விநியோகஸ்தர் என்கிற அடிப்படையில் வாத்தி வெளியாகவிருக்கிறது.
அதேநாளில், மோகன்ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் பகாசூரன் படமும் வெளியாகவிருக்கிறது.
இந்தப்படத்தை தமிழ்நாடெங்கும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
இதனால் இரண்டுவிதமான சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன.
ஒன்று, தனுஷ் படம் வெளியாகும் நாளில் இந்தப்படமும் வெளியாக வேண்டும் என செல்வராகவன் வலியுறுத்தியதாலேயே இப்படம் 17 ஆம் தேதி வெளியாகிறது என்பது.
வாத்தி படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனம் கேட்டதாகவும் அதைத் தர ல்லித்குமார் மறுத்துவிட்டதாகவும் அதன் காரணமாக வாத்திக்குப் போட்டியாக பகாசூரன் படத்தை ரெட்ஜெயண்ட் வெளியிடுகிறது என்பது இரண்டாவது சர்ச்சை.
இவை குறித்து விசாரித்தால், இரண்டு சர்ச்சைகளுமே அபத்தமானவை அடிப்படையற்றவை என்கிறார்கள்.
வாத்தி படத்தின் தமிழ்நாடு உரிமை சுமார் 12 கோடி என்றும் அதை சுமார் 18 கோடிவரை வியாபாரம் செய்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
பகாசூரன் படத்தை ஒருவர் இரண்டேகால் கோடிக்கு வாங்கி மேற்கொண்டு செலவுகள் செய்துள்ளார்.அதன்படி அதன் மொத்த மதிப்பு மூன்றேகால் கோடி வரும்.
படத்தை வாங்கிய அவர் முன்பே தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சிக்கும் திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட்ஜெயண்ட் நிறுவனத்துக்கும் கொடுத்துவிட்டாராம்.
பிப்ரவரி 3 அல்லது பத்தாம் தேதி இப்படத்தை வெளியிட நினைத்திருக்கிறார்கள். ரெட் ஜெயண்ட்டுக்கு வரிசையாகப் படங்கள் இருந்த காரணத்தால் தள்ளித் தள்ளிப் போய் இப்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறது.
அதேநேரம் வாத்தியும் தள்ளித் தள்ளி இந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.
இந்தக் காரணங்களால்தான் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியாகின்றன.
இது இரண்டு படங்கள் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தெரியும்.
இது தெரியாதவர்கள்தாம் இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்கின்றனர்.










