விமர்சனம்

டாடா – திரைப்பட விமர்சனம்

இரு கோடுகள், விஸ்வாசம் இந்த இரண்டையும் எடுத்து ஒரு ஜாரில் போட்டு மிக்சியில் அரைத்தால் கிடைக்கும் ஜூஸ்தான் டாடா. ஆனால் இதில் கலக்கப்பட்டுள்ள சுவை வேறு மாதிரியானது. அதைத்தான் டாடா வேறுபடுத்திக் காட்டுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது கவினும் அபர்ணா தாசும் காதலிக்கிறார்கள். இதில் அபர்ணா கர்ப்பமாகிறார். இருவரையும் அவரவர் குடும்பங்கள் கைகழுவி விட, நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டில் தங்குகிறது ஜோடி. அங்கு நண்பனின் நண்பர்களால் நைட் பார்ட்டி தொல்லை ஏற்பட, வீடு வாடகைக்கு எடுத்து செல்கிறது ஜோடி. அதுவும் சென்னையில் ரூ.2,500 வாடகையில் ஒரு வீடு. அங்கிருந்துதான் கவினுக்கும் அபர்ணாவுக்கும் பண நெருக்கடி காரணமாக அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. ஒரு நாள் தனது போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, மனைவியின் தொல்லை இல்லாமல் வேலை பார்க்க நினைக்கிறார் கவின். அந்த சமயம் பார்த்து, அபர்ணா பிரசவ வலியால் துடிதுடித்து மயங்கி விழுகிறார். தகவல் அறிந்து அங்கு வரும் அபர்ணாவின் பெற்றோர் அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். மாலையில் வீடு திரும்பும் கவினுக்கு விஷயம் தெரிய வர, ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறார். அங்கு பச்சிளம் ஆண் குழந்தை மட்டும் இருக்கிறது. அபர்ணாவை அவரது பெற்றோர் அழைத்து சென்றுவிட்டதாக நண்பர் சொல்கிறார். குழந்தையை எடுத்துக்கொண்டு அபர்ணா வீட்டுக்கு போனால் அவர் வீட்டைக் காலி செய்திருக்கிறார். தனது வீட்டிலும் அப்பா பாக்யராஜ் உள்ளே சேர்க்க மறுக்கிறார். குழந்தைக்கு நல்ல டாடாவாகி எப்படி கவின் வளர்க்கிறார், அபர்ணா என்ன ஆனார் என்பதெல்லாம் வெள்ளித்திரையில் பார்த்து தெரிஞ்சிக்குங்க.

இந்தப்படத்தோட பலமும் பலவீனமும் திரைக்கதைதான். பழைய பாலசந்தர் கதையைத் தூசு தட்டி எடுத்து அதில் மிக்சிங் வேலைகள் செய்வது சாதாரண விஷயம் கிடையாது. அதுக்கும் ஒரு திறமை வேண்டும். அந்த திறமை படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான கணேஷ் கே. பாபுவிடம் நிறையவே இருக்கு.

கவினும் அபர்ணாவும் கட்டிலில் நெருக்கமாக படுத்திருக்கும் முதல் காட்சியிலே ஒரு லவ் டிராமாவுக்கான மூட் ஐ கிரியேட் செய்கிறது படம். அதை மெதுவாக நகர்த்திப்போகும் முதல் பாதி எல்லாமே புதுப்புது சம்பவங்களால் காட்சிப்படுத்தலில் மின்னியிருக்கிறார் கணேஷ் பாபு. ஆனால் இரண்டாம் பாதியில் ஏன் பாபு இப்படி தடுமாறி இருக்கீங்க?

இந்தப்படத்தை எமோஷன் அதிகம் நிறைந்த, அதே சமயம் ஹீயுமரும் கலந்த படமாகத் தரவே கணேஷ் பாபு முயன்றிருக்கிறார். அதில் பாதி கிணறும் அவர் பக்காவாக தாண்டியிருக்கிறார். முதல் பாதி முழுக்க, இந்த ஹியூமரும் எமோஷனும் சரிவர கைகூடியிருக்கிறது. அதிலும் எமோஷன் ஏரியாவில் அவர் புகுந்து விளையாடியிருக்கிறார்.

குடிக்கக் கூடாது என குழந்தை மீது சத்தியம் வாங்கிய பிறகும் கவின் குடித்துவிட்டு வரும்போது அபர்ணா அதிர்ச்சி அடைவது, பிரசவ வலியால் துடிதுடித்து போன் செய்யும்போது, கவின் போனை சுவிட்ச் ஆப் செய்வது, ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தையை விட்டுவிட்டு பிறகு மனம் மாறி திரும்பி வருவது என எமோஷன் ஏரியா முழுக்கவே பேப்பர் எழுத்தில் இருப்பது, பக்காவாக வந்திருக்கிறது.

அதே சமயம், இரண்டாம் பாதியில் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்ய முனைவதுதான் படத்தின் பிரச்னையாகி இருக்கிறது. அந்த ஆபீசில் அபர்ணாவை ஒரு தலையாக காதலிக்கும் ஊழியரின் காமெடி சென்ஸ் பல இடங்களில் ரசிக்கும் விதமாக இருந்தாலும் சில இடங்களில் ஓவர் டோஸாகிவிடுகிறது. பெண்களுக்கு பாலியல் தொல்லை தரும் சைக்கோபாத் அதிகாரிகள் பெரும்பாலான ஆபீஸ்களில் இருக்கிறார்கள். ஆனால் பெரிய கார்ப்பரேட் கம்பெனியில் இந்த மாதிரி பஃபூன் கேரக்டர் இருப்பாரா என்பது பெரும் சந்தேகம். அந்த கேரக்டர், படத்துடன் கொஞ்சமும் ஒட்டவில்லை.

96 படத்தில் போட்டோகிராபர் விஜய்சேதுபதிக்கு கீழே உதவியாளராக இருக்கும் வர்ஷா அவரை ஒரு தலையாக காதலிப்பார். அதை எந்த இடத்திலும் சொல்ல மாட்டார். அந்த ஃபீலிங், இதில் கவினின் ஒரு தலை காதலியிடம் வந்திருக்க வேண்டும். அது மிஸ்சிங். ஆனால் நான் ஏற்கனவே கமிட் ஆனவன் என கவின் அவரை புரிய வைக்கும் தருணம் சாஃப்ட் டச்சிங். குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுவிட்டு பிறகு மனம் மாறி வரும் காட்சி, அக்‌ஷய்குமாரின் ஹே பேபி படத்தை ஞாபகப்படுத்துகிறது. குழந்தையை சர்ச்சில் விட்டுவிட்டு, பலத்த மழை பெய்யும்போது திரும்பி சென்று குழந்தையை எடுத்து வருவார் அக்‌ஷய்குமார். அந்த காட்சியில் டைரக்டர் சாஜித் கான் எமோஷன் கேம் ஆடியிருப்பார். அந்த படத்தின் கதைகூட டாடாவுடன் மேச் செய்து பார்க்க வைக்கும் இடம் அது.

படத்தில் விடிவி கணேஷின் வேடமும் அவர் அறிமுகமாகும் அந்த காட்சியும் கலகலப்பான ஏரியாதான். விடிவியும் அதில் ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆனால் அதற்கு பிறகு அவரையும் அம்போ என டைரக்டர் விட்டுவிட, சில இடங்களில் சிரிக்க வைக்க முடியாமல் சிக்குகிறார் விடிவி. படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே தனியாக்க் கேட்க முடியாது. ஆனால் கதையோடு இரசிக்கலாம். ஆனால் அந்த ரிசார்ட் டூர் கவின் பாடல் தேவையில்லாத திணிப்பு. எமோஷன் காட்சிகளில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கும் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின். ஆனால் காமெடி என்ற பெயரில் வரும் காட்சிகளில் அந்த காட்சிகளை போலவே அவரது பிஜிஎம்மும் பிசுறுகிறது.

ஒர்க்அவுட்டான எமோஷனல். மற்றொன்று கவின், அபர்ணாவின் நடிப்பு. கவின் கிட்டத்தட்ட புதுமுகம் போலத்தான். ஆனால் அந்தச்சுவடு தெரியாமல், மணிகண்டன் கேரக்டரை அவர் உள்வாங்கி இருக்கும் விதம், சில முன்னணி ஹீரோக்களால் கூட செய்ய முடியாத விஷயமாக இருக்கிறது. அவருக்கு சரிசமமாக போட்டியாக நிற்கிறார் அபர்ணா தாஸ். ஜூனியர் நயன்தாராவாக அவதாரம் எடுத்து வந்திருக்கிறார். உணர்வுகளை அவர்கள் இருவரும் வெளிப்படுத்தும் இடங்களில் எல்லாம் நடிப்பில் முதிர்ச்சியோ முதிர்ச்சி. கிளைமாக்சில் ஒட்டுமொத்தமாக இருவரும் சேர்ந்து இறங்கி அடிக்கிறார்கள். அந்த இடம் ரசிகாஸை கண் கலங்க வைக்கும் இடம்.

உங்களால நாங்க நல்லா இருக்கணும், உங்கள விட நல்லா இருந்திடக்கூடாது என்ற வசனம் ஏற்கனவே வைரலாகிவிட்டது. கதையோடு மட்டுமல்ல, படம் பார்க்கும் பலரோட வாழ்க்கையோடும் இந்த வசனம் பின்னிப் பிணைகிறது. இதுபோல் ஆங்காங்கே வசனத்திலும் வசியம் செய்கிறார் கணேஷ் பாபு.

– ஜியா

Related Posts