விமர்சனம்

கார்டியன் – திரைப்பட விமர்சனம்

கார்டியன் என்றால் பாதுகாவலர். பெண்குழந்தைகளின் முதல் பாதுகாவலர் அவர்களின் அம்மாதான்.அவர்களுக்குள்ளான பிணைப்பு அளவிட முடியாதது.அதில் சிக்கல் ஏற்பட்டால் அதன் பாதிப்பும் அளவிட முடியாத அளவுதான் இருக்கும்.ஓர் அம்மா ம்கள் பாசம், அதில் ஏற்படும் கொடும் சிக்கல்,அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகிய உணர்வுப்பூர்வமான விசயங்களை பேய் மற்றும் திகில் சுவை கலந்து கொடுத்திருக்கும் படம் கார்டியன்.

நான் எது செய்தாலும் விளங்காது என்கிற தாழ்வுமனப்பான்மையுடன் வாழ்கிறார் ஹன்சிகா.திடீரென அவர் எது சொன்னாலும் அப்படியே நடக்கும் என்கிற அதிசய சக்தியைப் பெறுகிறார்.அந்த சக்தியால் சிலருக்கு எதிர்விளைவுகளும் நடக்கின்றன.இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்? என்று தேடும்போது கிடைக்கும் விடைகள்தாம் திரைக்கதை.

அப்பாவி இளம்பெண்,அதிரடி காட்டும் பேய் ஆகிய இருவித நடிப்பிலும் தன் முத்திரையைப் பதித்திருக்கிறார் ஹன்சிகா.நிஜவாழ்வில் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் ஹன்சிகாவுக்கு இந்தக்கதை மனதைத் தொட்டு நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் போலும். இரசித்து நடித்திருக்கிறார்.

பிரதீப் ராயன், ஸ்ரீமன், சுரேஷ்மேனன், ஸ்ரீராம்பார்த்தசாரதி ஆகியோர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று அதற்குப் பொருத்தமாகவும் நடித்திருக்கிறார்கள்.

தியா, பேபி க்ரிஷிதா ஆகியோர் காட்சிகள் நெகிழ்வு.ஷோபனா,அபிஷேக்வினோத் ஆகியோர் அளவு.

தங்கதுரை, மொட்டைராஜேந்திரன் ஆகியோருக்குச் சிரிக்க வைப்பது பொறுப்பு.அதில் சிக்கனம் காட்டியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல்,திரைக்கதையில் இருக்கும் உணர்ச்சிகளை காட்சிகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

திகில் படங்களுக்கு பின்னணி இசை பெரும்பலம் என்பதை உணர்ந்து பணியாற்றியிருக்கிறார் சாம்.சி.எஸ்.பாடல்கள் இரசிக்க வைக்கின்றன.

பென்களின் உணர்வுகளை மையப்படுத்தி திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது.நேரடியாக இல்லாமல் குறியிடாகப் பல விசயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

குருசரவணன் மற்றும் சபரி ஆகிய இரட்டை இயக்குநர்கள் இயக்கியிருக்கிறார்கள்.

தம் வாழ்வில் ஏற்படும் பெரும்பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இயலாதவர்கள், எதிர்வினையாற்ற முடியாதவர்கள் மறைந்த பின் அதைச் செய்ய மனித உருவிலானவர்களைத் துணைக்கு அழைத்துக் கொள்ளும் வழக்கமான கதைக்குள் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரே பழிவாங்கினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்து படத்தைப் புதிதாக்கியிருக்கிறார்கள்.

– ஈசன்

Related Posts