கவினின் ஸ்டார் வெளியீட்டில் மீண்டும் மாற்றம்

பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இயக்கும் ஸ்டார் படத்தில் கவின் நாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தில்,அதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம், மாறன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை நித்தம் ஒரு வானம் படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கிறார்.கவின் நடித்த டாடா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எழிலரசு ஸ்டார் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்டார் படத்தை பிப்ரவரி 14,2014 காதலர் தினத்தன்று வெளியிட்டுவிடவேண்டும் எனத் திட்டமிட்டு வேலை செய்துவந்தார்கள்.ஆனால் நடக்கவில்லை.
அதன்பின், ஏப்ரல் 12 ஆம் தேதி படத்தை வெளியிட்டுவிடத் திட்டமிட்டார்கள்.
இப்போது அதிலும் மாற்றம் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
காரணம்?
படத்தைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றின் விற்பனையை முடித்துவிட வேண்டும் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் திட்டம்.
இந்நிலையில் படத்தை வாங்க முன்வந்திருக்கிறது ஹாட்ஸ்டார் நிறுவனம் முன்வந்திருக்கிறது.
ஆனால், படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் சொன்ன விலையைக் கேட்டு ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துவிட்டதாம்.
இப்படம் தொடங்கும்போது படத்தின் மொத்தத் தயாரிப்புச் செலவு எட்டுகோடி என்று திட்டமிட்டார்களாம்.படம் நிறைவடையும்போது பனிரெண்டுகோடியைத் தாண்டிவிட்டது என்கிறார்கள்.
தயாரிப்புச் செலவு அதிகரித்ததால் படத்தின் விலையையும் அதிகமாகச் சொல்கிறார்கள்.இதனால் வியாபாரம் நிறைவடையாமல் இருக்கிறதாம்.
வியாபாரம் நிறைவடையாமல் இருக்க விலை மட்டும் காரணமில்லை, இது மார்ச் மாதம், நிதியாண்டு நிறைவு மாதம் என்பதால் இப்போது வியாபாரத்தை முடிக்காமல் ஏப்ரல் தொடங்கிய பிறகு புதிய நிதியாண்டில் வியாபாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறதாம்.
இதனால், ஏப்ரல் 12 ஆம் தேதி படம் வெளியாவது உறுதியாகவில்லை என்கிறார்கள்.
படம் எப்போது வெளியாகும்? என்றால், அனேகமாக மே மாதம் படம் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.அதற்குள் வியாபாரமும் முடிவடைந்துவிடும் என்பதால் தெம்பாகப் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு நம்பிக்கையாக இருக்கிறதாம்.
இவை எல்லாவற்றையும் விட முக்கியச் செய்தி,இப்போதுள்ள நிலையில் இப்படத்தைப் பார்த்தோர் அனைவரும் படம் நன்றாக வந்திருக்கிறது.கவினுக்கு இன்னொரு வெற்றிப்படமாக இருக்கும் என்று நம்பிக்கையாகச் சொல்வதுதான்.