எடுபடாத விக்ரமின் சமாதான முயற்சி – கைவிட்டுப் போன தயாரிப்பு நிறுவனம்
‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களுக்குப் பிறகு அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் படம் கோப்ரா. விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்திருக்கிறார்.உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறது.
இப்படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அஜய்ஞானமுத்துவுடன் இணைந்து இன்னொரு படத்தில் பணியாற்றவிருப்பதாக விக்ரம் சொல்லியிருக்கிறார்.
அந்தப்படம் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று உலவிக்கொண்டிருக்கிறது.
அஜய்ஞானமுத்து சொன்ன கதை விக்ரமுக்குப் பிடித்துவிட்டதால், ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இந்த விசயத்தைச் சொல்லி அவர்களையே படத்தைத் தயாரிக்கச் சொல்லிக் கேட்டாராம் விக்ரம்.
அவர்களும் ஒப்புக்கொண்டனராம். கதை, செலவு,விக்ரம் சம்பளம், அஜய்ஞானமுத்து சம்பளம் ஆகிய அனைத்து விசயங்களும் பேசப்பட்டு அவை அனைத்திலும் சுமுகமுடிவு எட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதன்பின், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இயக்குநர் அஜய்ஞானமுத்துவை தொலைபேசியில் அழைத்திருக்கிறார்.ஒருமுறைக்குப் பலமுறை அழைத்தும் அஜய்ஞானமுத்து அழைப்பை ஏற்கவில்லையாம். அதுமட்டுமின்றி திரும்பக் கூப்பிடவும் இல்லையாம். ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்த தயாரிப்பாளர் கடுப்பாகி, இப்பவே போனை எடுக்காத இவரை வைத்துப் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் ஏஜிஎஸ் குழு உட்பட எல்லோருக்கும் அதிர்ச்சியாம். விசயமறிந்த விக்ரம், தயாரிப்பாளரைச் சமாதானப்படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அகோரம் உடன்படவில்லையாம்.
அதன் விளைவு, இயக்குநரும் கதாநாயகனும் இருக்கிறார்கள். கதையும் தயாராக இருக்கிறது. தயாரிப்பாளர் தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.
இயக்குநரின் பொறுப்பற்ற தன்மையால் ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தை இழந்து நிற்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் வருகின்றன.











