சுதா கொங்கரா கடுப்பு சிகா வெளிநடப்பு – சிக்கலில் புறநானூறு
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.இதற்கடுத்து, சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது.
டான் பிக்சர்ஸ் படநிறுவனம் சார்பாக ஆகாஷ் தயாரிக்கும் அந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜெயம்ரவி,ஸ்ரீலீலா,அதர்வா ஆகியோர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.
இவர்கள் நால்வரையும் வைத்து லுக் டெஸ்ட் எனும் புகைப்படப் படப்பிடிப்பு மற்றும் திரைப்பட அறிமுகக் காணொலி ஒன்றை உருவாக்கவும் திட்டமிட்டார் இயக்குநர் சுதா கொங்கரா.
இதற்காக ஜெய்ம்ரவியை அழைத்து ஒருநாள் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்கள்.அதற்கடுத்து சிவகார்த்திகேயனை வைத்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனும் சொன்ன நேரத்தில் படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்றுவிட்டாராம்.அவர் போனவுடன், தாடி அதிகமாக இருக்கிறது.கொஞ்சம் குறையுங்கள் என்று சுதா கொங்கரா கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டதும் சிவகார்த்திகேயனுக்கு அதிர்ச்சி.இப்போது இருக்கிறபடியே இருங்கள் அதை வைத்தே படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறேன் என்று சுதா கொங்கரா சொன்னதால்தானே அப்படியே வந்தேன்.இப்போது குறையுங்கள் என்றால் எப்படி? என்று கேட்டதோடு தாடியைக் குறைக்க மறுத்துவிட்டாராம்.
இதனால் கடுப்பான சுதா கொங்கரா,சிவகார்த்திகேயன் இருக்கும்போதே அவரை மட்டும் விட்டுவிட்டு அங்கிருக்கும் எல்லோரையும் ஏதோ ஒரு காரணம் சொல்லி சகட்டு மேனிக்குத் திட்டத் தொடங்கிவிட்டாராம்.அவற்றில் எழுத முடியாத சொற்களும் அடக்கம் என்கிறார்கள்.
அதன் உச்சமாக சிவகார்த்திகேயன் காதுபடவே, பருத்திவீரன் கார்த்தி மாதிரி இவ்வளவு தாடியோடு இருந்தால் எப்படி? என்றும் சொல்லிவிட்டாராம்.
அதைக் கேட்டு அதிர்ச்சியான சிவகார்த்திகேயன், உடனே அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டாராம்.
அவர் போனதே தெரியாமல் ஒளியமைப்பு நடந்து கொண்டிருந்ததாம்.அதை முடித்து விட்டு அவர் எங்கே? என்று தேடியபோதுதான் கிளம்பிப் போனதே தெரியவந்திருக்கிறது.
இதனால் அந்தப் படப்பிடிப்பு இரத்தாகியிருக்கிறது.அதன் விளைவு,இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டிய அந்தப்படத்தின் அறிவிப்பும் நடக்காமல் போயிருக்கிறது.
அந்த நிகழ்வுக்குப் பிறகு இயக்குநர் சுதா கொங்கராவின் அழைப்பை சிவகார்த்திகேயன் ஏற்கவே இல்லையாம்.அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் பதிலில்லையாம்.படத்தின் திரைக்கதை படிக்கும் ஸ்கிரிப்ட் ரீடிங் என்றழைக்கப்படும் நிகழ்வுக்கு அவரை அழைத்த போதும் வ்ருவேன் வரமாட்டேன் என்று எதுவும் சொல்லவில்லையாம்.
என்ன செய்வதெனத் தெரியாமல் ஒரு தயாரிப்பாளரை சமரசம் செய்ய அழைத்திருக்கிறார் சுதாகொங்கரா.அவரும் என்னால் முடியாது என்று பின்வாங்கிக் கொண்டாராம்.
இப்போது படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷிடம் இந்தத் தகவல்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.அவர் இரண்டு தரப்பிலும் பேசிக் கொண்டிருக்கிறார் என்றும் விரைவில் சிக்கல் சரியாகும் என்றும் சொல்கிறார்கள்.
என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.