ஒரேநாளில் இரண்டு படங்களை வெளியிடும் உதயநிதி – விஷால் படத்துக்குச் சிக்கல்
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்‘ நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘டிமான்டி காலனி‘, ‘இமைக்கா நொடிகள்‘ ஆகிய படங்களைக் கொடுத்த அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கிவருகிறார். சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இப்படத்துக்கு இசை ஏ.ஆர்.ரகுமான்.
இப்படத்தை செவன்ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துவருகிறார்.
ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை ரெட்ஜெய்ண்ட் நிறுவனம் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதே ஆகஸ்ட் 11 ஆம் தேதி இன்னொரு படத்தையும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது.
இந்தியில் ஆமிர் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் லால் சிங் சத்தா. நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அதில் ஆமிர்கானுடன் கரீனா கபூர், தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்கப் படமான ஃபாரஸ்ட் கம்ப் (Forrest Gump)-ஐ தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையைத்தான் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஒரேநாளில் இரண்டு படங்களை அந்நிறுவனம் வெளியிடவிருப்பது எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கியிருக்கிறது.
அதோடு அடுத்தநாள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் விஷாலின் லத்தி படத்துக்கு நல்ல திரையரங்குகள் கிடைக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.












