December 11, 2025
சினிமா செய்திகள்

அஜீத் படத்துக்குக் கைமாறாக விஜய் படம் – சுவாரசிய கதை

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள படம்’குட் பேட் அக்லி’.இப்படத்தில் அஜீத்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ்,யோகிபாபு, பிரபு உட்பட பலர் நடித்துள்ளனர்.ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா திரையரங்க வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் இராகுல் பெற்றிருக்கிறார்.

இவற்றில் கர்நாடகா திரையரங்க வெளியீட்டு உரிமையை கேவிஎன் நிறுவனத்திற்கு அவர் கொடுத்திருக்கிறார்.இந்த கேவிஎன் நிறுவனம்தான் இப்போது விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது.

அந்த நிறுவனத்துக்கு இந்தப்படத்தின் கர்நாடக திரையரங்கு வெளியீட்டு உரிமையை இராகுல் கொடுத்ததற்குப் பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள்.

அது என்ன காரணம்?

அஜீத் படத்தின் உரிமையைக் கொடுத்ததற்கு கைமாறாக விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைக் கேட்கிறாராம் இராகுல்.

விஜய்யின் முந்தைய படமான தி கோட் படத்தையும் தமிழ்நாடு திரையரங்குகளில் வெளியிட்டவர் இராகுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குட்பேட்அக்லி படத்தின் உரிமையைக் கொடுத்துவிட்டு அதற்குப் பதிலாக இராகுல் இப்படிக் கேட்பார் என்பதை கேவிஎன் நிறுவனம் எதிர்பார்க்கவில்லையாம்.

ஜனநாயகன் படத்தின் விலை குறித்து அந்நிறுவனம் வைத்திருக்கும் நினைத்திருப்பதற்கும் இராகுல் சொல்லும் விலைக்கும் வித்தியாசம் இருக்கிறதாம்.அதனால் பதில் சொல்லாமல் இருக்கிறதாம் அந்நிறுவனம்.

அதேநேரம் குட்பேட்அக்லி பட வெளியீட்டுக்கு முன்பாகவே ஜனநாயகன் உரிமையைப் பெற்றுவிட வேண்டும் என்று இராகுல் திட்டமிட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால்,கேவிஎன் நிறுவனம் அதற்கு உடன்படவில்லை என்று சொல்லப்படுகிறது.ஜனநாயகன் வெளியீட்டுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கிறது.அதனால் அவசரமாக வியாபாரம் செய்ய வேண்டியதில்லை என்று அந்நிறுவனம் சொல்கிறதாம்.

ஜனநாயகனுக்காகத்தான் குட்பேட்அக்லி படத்தின் உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்றால் அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் அவர் யாருக்கு வேண்டுமானலும் கொடுத்துக் கொள்ளட்டும் என்று கேவிஎன் நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது என்கிறார்கள்.

இதனால் தமிழின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் அஜீத் ஆகியோரின் படங்களை தொடர்ச்சியாக வெளியிடலாம் என்கிற இராகுலின் ஆசை நிராசை ஆகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

அதேநேரம், இது தற்காலிகமான பின்னடைவுதான்,ஜனநாயகன் தமிழ்நாடு உரிமையை அவரே கைப்பற்றுவார் என்றும் சொல்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதெனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Posts