சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி கைவிட்டார் மணிரத்னம் கைகொடுத்தார்

அஜீத் நடித்த அமராவதி உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் செல்வா. இவர் இயக்கத்தில் நாங்க என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் சில படங்களை இயக்க முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை.

2017 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் வணங்காமுடி என்கிற படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்துவிட்டது.

இந்தப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை படம் முடியுமுன்பே கேட்டிருக்கிறார் அரவிந்த்சாமி. அதைத் தரவில்லை என்பதால் குரல்பதிவு உட்பட எந்த வேலைக்கும் அரவிந்த்சாமி ஒத்துழைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது.

ஏற்கெனவே தொடங்கப்பட்ட சில படங்கள் நடக்கவில்லை என்கிற சோகத்தில் இருந்த இயக்குநர் செல்வாவுக்கு வணங்காமுடி திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பியிருந்தார்.

அதற்கும் தடை ஏற்பட்டதால் மிகவும் நொந்துபோயிருந்த இயக்குநர் செல்வாவுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

பிரபல இணையதள நிறுவனத்துக்காகச் சில குறும்படங்களைத் தயாரித்துத் தரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் மணிரத்னம்.

அவற்றில் ஒரு குறும்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் செல்வாவைக் கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறாராம் மணிரத்னம்.

அரவிந்த்சாமி கைவிட்டதால் நொந்துபோய் சோர்ந்திருந்த இயக்குநர் செல்வா இப்போது உற்சாகமாக அந்தப்படத்தின் பணிகளில் ஈடுபட்டுவருகிறாராம்.

இதுவாவது நல்லபடியாக நடக்கட்டும்.

Related Posts