இயக்குநர் விஜய்பாலாஜி – சாமானிய மனிதர் சாதித்த கதை –
அப்பா அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. மத்தியதர வர்க்க வீட்டில் மூன்றாவது பையன். டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு.
பள்ளியில் படிக்கும்போதே திரைப்படங்கள் மீது தீராத ஆர்வம்.
‘கரகாட்டக்காரன்’ தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி அறிமுகமும் ஆதரவும் இருந்ததால் சென்னை பயணம்.
இராயப்பேட்டையில் இருந்த அவருடைய அலுவலகத்தில் ஏழு வருடங்கள் பணியாற்றிய அனுபவம். அங்கிருந்து இயக்குநர்கள் இராமநாராயணன் , பாலு ஆனந்த், சி.ரங்கநாதன், சுரேஷ்கிருஷ்ணா, ராஜீவ்மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநர்.
இவற்றிற்குப் பின் தெலுங்கில் பிரபல தயாரிப்பாளர் நாக அசோக்குமார் தயாரித்த ‘மௌனராகம்’ படத்தின் இயக்குநரானவர்.
இவ்வளவு நீண்ட அறிமுகத்துக்குச் சொந்தமானவர் இயக்குநர் விஜய்பாலாஜி.
இந்தியில் வெளியான சச்சின் டெண்டுல்கர் ஆவணப்படத்தைத் தமிழில், ‘சச்சின் பல கோடி கனவுகள்’. என்கிற பெயரில் மொழிமாற்று செய்ததில் புதியபயணம் தொடக்கம்.
அதன்பின், அல்லு அர்ஜுனின் ‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படம் தமிழில் ‘என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா’ என்ற பெயரில் வெளியானது.
அந்தப் படத்துக்குத் தமிழ் வசனங்கள். சீரஞ்சீவி நடித்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் தமிழ்மாற்று எனத் தொடர்ந்த பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்த படம் ‘வைகுண்டபுரம்’.
2020 பொங்கல் நாளில் தெலுங்கில் வெளியான படம் ‘ஆல வைகுந்தபுரம்லு’.அல்லுஅர்ஜுன் நாயகனாக நடித்த இந்தப்படம் மாபெரும் வெற்றி.
இந்தப் படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்காக தமிழில் மொழிமாற்று செய்யும் பொறுப்பு இவரிடம் வந்தது.
இப்படம் தெலுங்கு மொழிமாற்று என்று தெரியாத அளவுக்கு நேர்த்தியாக தெலுங்கு உதட்டசைவுக்கு ஏற்ப தமிழ் வசனங்களை எழுதியிருந்தார் விஜய்பாலாஜி.
அப்படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ என்கிற பாடலை இங்கும் புட்ட பொம்மா என்றே தொடங்கிய உத்தி படத்தின் வரவேற்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் தமிழ் மொழிமாற்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்து விஜய்பாலாஜியை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
இதன்விளைவு, தமிழில் மொழிமாற்று செய்ய நினைக்கும் தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் முதலில் செய்வது விஜய்பாலாஜியின் தொலைபேசி எண்ணைப் பிடிப்பதுதான்.
அவருடைய திறமைக்கான பரிசாய் தெலுங்குப்படங்கள் வரிசைகட்டி வந்தாலும் இயக்குநராக வெற்றி பெற வேண்டுமென்பதுதான் அவருடைய கனவு.
அதற்காகச் சில திரைக்கதைகளும் தயார். 2021 இல் இயக்குநராகப் பெரிய அடையாளம் பெறுவேன் என்பது அவருடைய நம்பிக்கை.
அவருடைய நம்பிக்கை நனவாக வாழ்த்துகள்.