தயாரிப்பாளர் ஆகிறார் சூரி – ஏன்?
நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இப்போது கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.அவர் கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.வெற்றிமாறன் இயக்கம் விஜய்சேதுபதி உள்ளிட்டோருடன் அவரும் நடித்திருந்தார்.அதன்பின் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து அவர் நடித்த கருடன் ஆகிய படங்கள் வசூல் வெற்றியையும் கொட்டுக்காளி படம் கருத்தியல் வரவேற்பையும் பெற்றது.
அதன்பின் விடுதலை 2 படம் வெளியானது.அந்தப் படமும் வரவேற்புப் பெற்றது.இவற்றிற்குப் பிறகு மாமன் படத்தில் நடித்தார்.அந்தப்படமும் வெற்றி பெற்றது.
அதன்பின் இப்போது,இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, எழுதி இயக்கும் புதியபடமான மண்டாடி படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
சூரி நாயகனாக நடித்த விடுதலை,விடுதலை 2 ஆகிய படங்களைத் தயாரித்த ஆர் எஸ் இன்போடெயிண்ட்மெண்ட் நிறுவனம்தான் இப்போது அவர் நடிக்கும் மண்டாடி திரைப்படத்தைத் தயாரித்துவருகிறது.
இடையில் வந்த கருடன்,மாமன் ஆகிய படங்களை சூரியிடம் மேலாளராகப் பணியாற்றிய குமார், லார்க் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன்மூலம் தயாரித்தார்.
ஆக இதுவரை வெளியான ஐந்து படங்களில் இரண்டை ஆர் எஸ் இன்போடெயிண்ட்மெண்ட் நிறுவனமும் இரண்டு படங்களை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கின்றன.இப்போது தயாராகும் படத்தையும் ஆர் எஸ் இன்போடெயிண்ட்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சூரியை கதாநாயகனாக வைத்துப் படமெடுக்க பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன என்றும் அதற்காகப் பல கதைகள் கேட்டு வைத்திருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இப்போது சொந்தமாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறாராம் சூரி.
பல நிறுவனங்கள் அவரை வைத்துப் படம் தயாரிக்க முன்வந்து கொண்டிருக்கும் போது அவர் சொந்தமாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்க வேண்டிய அவசியம் என்ன?
இதுபற்றி விசாரித்தால், சூரி கேட்கும் சம்பளம் தான் சிக்கல் என்கிறார்கள்.தன்னைத் தேடி வரும் தயாரிப்பு நிறுவனங்களிடம் பத்து கோடி பனிரெண்டு கோடி என்று சம்பளம் கேட்கிறாராம்.நான் நாயகனாக நடித்த படங்கள் எல்லாமே நல்ல வசூல் செய்திருக்கின்றன என்பதால் இப்படிக் கேட்கிறேன் என்றும் சொல்கிறாராம்.
அதனால் அவரை நாயகனாக வைத்துப் படம் தயாரிக்க வரும் நிறுவனங்கள் எல்லாம் வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விடுகின்றனவாம்.
எனவே, தாமே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிப்பது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
நாயகனாக வளர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது அவசரமுடிவு என்று சிலரும், பிடித்த கதைகளைச் செய்ய இதுதான் சரி எனவே இது நல்லமுடிவு என்று சிலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
எது சரி? என்பது போகப் போகத் தெரியும்.











