சினிமா செய்திகள் நடிகர்

சர்ச்சையைத் தவிர்க்க நள்ளிரவில் புதிய போஸ்டர் வெளியிட்ட விஜய்

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜூன் 22. அதையொட்டி அவர் நடிக்கும் 62-வது படத் தலைப்பும் முதல்பார்வையும் ஜூன் 21 மாலை அறிவிக்கப்பட்டது.

படத்தின் பெயர் ‘சர்கார்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தீபாவளிக்கு வெளியாகும் என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல்பார்வையில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற படம் உள்ளது. ஆனால், இனிமேல் புகை பிடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் என தான் கொடுத்த வாக்குறுதியை விஜய் மீறியுள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டுக்கான கூட்டமைப்பும், பசுமைத் தாயகம் அமைப்பும் இணைந்து ‘தமிழ்நாட்டில் புகையிலை கட்டுப்பாடு’ என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை சென்னையில் நடத்தின. இந்த நிகழ்ச்சியில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார்.

“சினிமாவில் குடிப்பதற்கும், புகை பிடிப்பதற்கும் எதிராக நாங்கள் போராடி வருகிறோம். எங்கள் போராட்டத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதேபோல் விஜய்யும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

அவருடைய வேண்டுகோளை, விஜய்யும் ஏற்றுக் கொண்டார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அருகே ‘குருவி’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட விஜய்யிடம் ஒரு பத்திரிகையாளர் போனில் தொடர்புகொண்டபோது, “மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். புகைப்பழக்கத்துக்கு எதிரான அவருடைய போராட்டம், ஆரோக்கியமான விஷயம்தான். அவருடைய வேண்டுகோளை ஏற்று, இனிமேல் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் அதற்கு மாறாக புகை பிடிப்பது போன்ற காட்சி வெளியானதும், பல்ரும் விஜய் ஏற்கெனவே சொன்னதைச் சுட்டிக்காட்டினர்.

தனது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்
புகைப்பிடிக்கும் காட்சிகளை விளம்பரப்படுத்துவதற்கு
நடிகர் விஜய் வெட்கப்பட வேண்டும் என்று அன்புமணி ட்வீட் செய்தார்.

முதல்பார்வை வெளியீடு மிக சந்தோசமாக இருக்கும் என்று நினைத்தால் பெரும் சர்ச்சையானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனராம்.

இதனால் அவசர அவசரமாக இன்னொரு புகைப்படத்தை நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.

Related Posts