பொம்மை வியாபாரம் – ஏறி அடித்த எஸ்.ஜே.சூர்யா
இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் (ANGEL STUDIOS MH LLP) நிறுவனத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்துள்ளார்.
இந்தப்படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.இந்த வாரம் வெளியாகவிருக்கிறது.
இவ்வளவு தாமதமாக என்ன காரணம்?
இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கொரோனா சிக்கல் வந்துவிட்டது.அதன் காரணமாக இரண்டாண்டுகள் போய்விட்டன.
அதன்பின்னும் உடனே படம் வெளியாகவில்லை. அதற்குக் காரணம், படத்தின் வியாபாரம் தொடர்பான விசயங்களில் கொஞ்சம் கூட இறங்கிவராமல் இருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, இணையதள வெளியீட்டு உரிமை ஆகியனவற்றிற்கு சுமார் எட்டுகோடி விலை என்றார் எஸ்.ஜே.சூர்யா. அவ்வளவு விலை கொடுக்க யாரும் தயாராக இல்லை என்றதும் அப்படியானால் படத்தைத் தரமாட்டேன் சும்மாவே இருக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
அதன்பின், படத்தை வெளியிட வியாபாரம் பேசியபோது, விநியோகஸ்தர்கள் யாரும் இப்படத்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இல்லை. அதற்கும் அவர் அசரவில்லை.
ரெட்ஜெயண்டில் இருக்கும் செண்பகமூர்த்தியிடம் போய்ப் படத்தைக் கொடுத்துவிட்டார். அவர் படத்தைத் திரையிடுவார், வருகிற வசூலில் அவருடைய தரகுத்தொகை போக அவ்வளவும் எஸ்.ஜே.சூர்யாவுக்கே.
அந்தத் தரகுத்தொகை விசயத்திலும் எஸ்.ஜே.சூர்யா இறங்கிவரவில்லையாம்.
படத்துக்காகச் சில கோடிகள் முன்பணம் கொடுத்தால் தரகுத்தொகை 15 விழுக்காடு கொடுக்காவிட்டால் தரகு 7 விழுக்காடு என்று பேச்சு. இவை உத்தேசக்கணக்கு.
எனக்கு முன்பணமே வேண்டாம், வசூலில் ஏழு விழுக்காடு எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
இப்படி யாரிடமும் இறங்கிப்போகாமல் படத்தை முழுமையாக நம்பி நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா.
அப்படியானால் இந்தப்படத்தை யாரிடமும் கடன் வாங்காமல் சொந்தமாகத் தயாரித்தாரா? வாங்கிய கடனைக் கொடுப்பதற்கு வியாபாரம் செய்திருக்க வேண்டுமே? என்றால், இந்தப்படத்துக்கு நெகட்டிவ் ஃபைனன்ஸ் முறையில் அவர் கடன் வாங்கினார். ஆனால் அக்கடனை அவர் நடிக்கும் படங்களில் கிடைக்கும் சம்பளத்தை வைத்தே அடைத்துவிட்டார். அதனால் எதற்கும் இறங்கிப்போகாமல் இருந்தார் என்று சொல்கிறார்கள்.
ஒரு படைப்பாளி தன் படைப்பின் மீது வைத்திருக்கும் அதீத நம்பிக்கையின் வெளிப்பாடே இது. ஒவ்வொரு படைப்பாளியும் இப்படி இருந்துவிட்டால் பல சிக்கல்களுக்கு இடமில்லாமல் போகும் என்கிறார்கள்.











