Uncategorized சினிமா செய்திகள்

கதையை மாற்றிய கமல் – சிக்கல் வருமா?

இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கமல். இதற்கடுத்து அவர் நடிக்கவிருக்கும் கமல் 233 ஆவது படத்தை எச்.வினோத் இயக்கவிருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூலை 4,2023 அன்று வெளியானது.

இந்தப்படத்தின் கதை குறித்து பல தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று…

ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கும் படத்தில் விஜய்சேதுபதி தான் நாயகனாக நடிப்பதாக இருந்ததாம். அதற்காக அவர் எழுதியிருந்த கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம் இருந்ததாம். அதில் கமல்ஹாசன் நடிக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது.

நாட்கள் போகப்போக அதில் மாற்றம் நடந்து, எச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசனே கதாநாயகனாக நடிப்பது என்று முடிவாகியிருக்கிறது.

அதற்காக, கமல்ஹாசனைக் கதாநாயகனாகக் கொண்டு ஓரிரு கதைகளை எச்.வினோத் சொல்லியிருக்கிறார். அவற்றைப் பற்றிய பல விவாதங்களுக்குப் பிறகு அந்தக் கதைகள் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்களாம்.

அதன்பின் கமல்ஹாசன், தான் எழுதிய ஒரு கதையைச் சொல்லி அதையே படமாக்குவோம் என்று சொல்லியிருக்கிறார். கதாநாயகன் சொல்லிவிட்டால் அதுவும் கமல்ஹாசன் போன்ற ஒரு நாயகன் சொல்வதை இயக்குநர் மறுக்கமுடியுமா? அவர் கதையை இயக்க எச்.வினோத் ஒப்புக்கொண்டாராம்.

அந்தக்கதை, ஏற்கெனவே தலைவன் இருக்கின்றான் என்கிற பெயரில் படமாக்க நினைத்த கதைதான் என்று சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தை எடுப்பதாகச் சொல்லி ஏற்கெனவே, லைகா நிறுவனத்தில் பெரும் தொகை வாங்கியிருக்கிறார் கமல்ஹாசன். அதற்காக அவர் எதையும் செய்யவில்லை. இப்போது அதே கதையைத் தன் நிறுவனத்தின் தயாரிப்பிலேயே உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்தச் செய்தி வெளியானால் சிக்கல் ஏற்படும் என்பதால் அதுகுறித்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சார்ந்தோர் அதிகாரப்பூர்வமாகச் சொல்லும் வரையில் இதுவும் ஒரு கதைதான்.

Related Posts