சினிமா செய்திகள்

உறுதியானது கமல் 233

லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருந்த விக்ரம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் கமல் இல்லாத காட்சிகள் படமாக்கப்படும் என்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் 234 ஆவது படத்தில் கமல் நடிக்கப்போவதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.

அதேசமயம் கமலில் 233 ஆவது படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.தொடக்கத்தில் கமல் 233 படத்தை இயக்குவது மலையாள இயக்குநர் மகேஷ்நாராயணன் என்று இருந்தது. விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு எல்லாம் மாறியது.

அதனால், சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் தான் கமலின் 233 ஆவது படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய உறுப்பினர்களுடன் நேற்று கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது இயக்குநர் எச்.வினோத்தும் உடனிருந்தார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதுமே கமல் -எச்.வினோத் கூட்டணி உறுதியாகிவிட்டதற்கான ஆதாரம் இது என்று சொல்லப்படுகிறது.

இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கும் படத்துக்கான படப்பிடிப்பு இடங்கள் தேடும் பணி தற்போதே தொடங்கிவிட்டதென்றாலும் இப்படத்துக்கு அடுத்துத்தான் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts