ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிர்ப்பு
இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில், மே 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையைக் கொண்ட இந்தப் படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது.
இப்படத்தைத் தொடர்ந்து சஹாரா இந்தியா பர்வார் நிறுவனத்தை உருவாக்கிய சுப்ரதா ராயின் பயோபிக் படத்தை சுதிப்டோ சென் இயக்கவுள்ளார்.ஜூன் 10 அன்று இப்படத்தின் முதல்பார்வை சலனப்படத்தை படக்குழு வெளியிட்டது. இப்படத்துக்கு ‘சஹாராஸ்ரீ’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். பாடல் வரிகளை குல்ஸார் எழுதுகிறார்.
இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
கேரளா ஸ்டோரி படத்துக்கு எதிர்ப்புகள் பரவலாக இருந்த நேரத்தில், ‘காம்ரேட் ஃபரம் கேரளா’ என்ற பக்கத்தில் ‘மற்றொரு கேரளா ஸ்டோரி’ என தலைப்பிடப்பட்ட ஒரு காணொலியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் அவர், “மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணப்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” எனப்பதிவிட்டிருந்தார்.
கேரளா ஸ்டோரிக்கு எதிராக இப்படி ஒரு கருத்தைப் பரப்பிய ஏ.ஆர்.ரகுமான், அந்தப்படத்தை இயக்கிய இயக்குநரோடு இணைந்து பணியாற்றுவது எப்படி?என்றும், இது சரியல்ல என்றும் ஏராளமானோர் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்துவருகிறார்கள்.











