சினிமா செய்திகள்

ராஜு முருகன் சசிகுமாரின் மை லார்ட் – வெளியீட்டுத் தேதி முடிவானது

ராஜுமுருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் மை லார்ட்.இப்படத்தில் சைத்ரா ஜே.ஆச்சார்,ஜெயப்பிரகாஷ்,குரு சோமசுந்தரம்,ஆஷா சரத்,இயக்குநர் கோபி நயினார்,வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு,ஷான் ரோல்டன் இசை, கலை இயக்கம் முனி பால்ராஜ்,படத்தொகுப்பு சத்யராஜ் நடராஜன், டி.ஆர்.பூர்ணிமா உடை வடிவமைப்பு, நடனம் எம்.ஷெரீப், சண்டை இயக்கம் பி.சி.ஸ்டண்ட் என வலிமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார் .

அண்மையில் வெளியான இப்படத்தின் முன்னோட்டத்தில்,இடம்பெற்றுள்ள வசனங்கள், சிறுநீரகத் திருட்டு தொடர்பான காட்சிகள்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வை நினைவூட்டும் காட்சிகள் ஆகியனவற்றோடு நாயகன் சசிகுமாரின் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பு ஆகியன இரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.

ஒரு ஆழமான கதையை எடுத்துக் கொண்டு, வணிகத் திரைப்படங்களுக்குரிய பொழுதுபோக்கு அமசங்களைத் தேவையான அளவு பயன்படுத்தி சுவாரசியமான திரைக்கதையை அமைத்து,அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு மிக உயரிய மாந்தநேயத்தை இப்படம் பேசியிருக்கிறதென்று படக்குழுவினர் சொல்கிறார்கள்.

இப்படத்தின் முதல்பார்வை,பாடல்கள் மற்றும் முன்னோட்டம் ஆகிய ஒவ்வொன்றும் வெளியாகும்போதும் படம் எப்போது வெளியாகும்? என்கிற ஆர்வத்தை இரசிகர்களிடத்தில் எழுப்பிக் கொண்டிருந்தது.

இப்போது அந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது.

இப்படத்தை பிப்ரவரி 13 ஆம் தேதி உலகெங்கும் வெளியிடவிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்கிறார்கள்.

பிப்ரவரி 14 என்பது காதலர் நாள்.இவ்வாண்டு அந்நாள் சனிக்கிழமையன்று வருகிறது.அதனால் அதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமையே இப்படம் வெளியாகவிருக்கிறது.

காதலர் நாளுக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம்?

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

என்கிற திருக்குறள் அறத்திற்கும் மறத்திற்கும் அடிப்படை அன்புதான் என்பதைச் சொல்லியிருக்கிறது.

அதுபோல், இப்படத்தில் நாயகன் நாயகி ஆகியோருக்கிடையேயான காதல் மட்டுமின்றி ஒட்டுமொத்த மானுட சமுதாயத்தின் மீதும் இயக்குநரும் நாயகரும் கொண்டிருக்கும் காதலின் வெளிப்பாடாக உருவாகியிருக்கும் இப்படம் அன்பை மட்டுமே ஆதாரமாகக் கொண்ட காதலர் நாளையொட்டி வெளியாவது சாலப்பொருத்தம் என்று படம் பார்த்தோர் சொல்கிறார்கள்.அறமும் அன்பும் எந்நாளும் வெல்லும்,இப்படமும் அப்படித்தான் என்றும் சொல்கிறார்கள்.

நல்லது நடக்கட்டும்.

– ஆநிரையன்

Related Posts