சினிமா செய்திகள்

ஜனநாயகன் படவழக்கு – இரண்டு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு விவரம்

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், இந்தப் படத்தை மறுஆய்வு குழுவுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து படத்தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா,இப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை இரத்து செய்து, உடனடியாக தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று அளித்த தீர்ப்பில்….

கேவிஎன் புரொடக்ஷன்ஸ் தாக்கல் செய்த ரிட் மனுவுக்கு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய முறையான வாய்ப்பு வழங்காமல் தனிநீதிபதி பி.டி.ஆஷா அத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கக்கூடாது.

இருப்பினும், ரிட் மனுவைத் தள்ளுபடி செய்வதற்குப் பதிலாக, தயாரிப்பு நிறுவனம் விரும்பினால், ரிட் மனுவை மீண்டும் விசாரணைப் பட்டியலில் சேர்த்து,தனிநீதிபதி முன்பு புதிய விசாரணைக்கு பட்டியலிடலாம்.

படத்தில் இராணுவ சின்னங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்நிய சக்திகள் நாட்டில் கலவரம் ஏற்படுத்துவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தீவிரமான புகார் வந்துள்ளன.எனவே, படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.தீவிரமான புகார் கூறப்பட்டுள்ள நிலையில்,பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காமல் பிறப்பித்த உத்தரவு இரத்து செய்யப்படுகிறது.

படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்த வழக்கில் கோரிக்கையை திருத்தம் செய்து படநிறுவனம் மனுத்தாக்கல் செய்யலாம்.அந்த மனுவுக்கு சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்கி தனிநீதிபதி உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனிநீதிபதி ஆஷாவின் தீர்ப்பை இரத்து செய்கிரோம்.இந்த வழக்கை தனிநீதிபதி ஆஷாவே மீண்டும் விசாரிப்பார்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Posts