ஜனநாயகன் படத்தில் நடித்தது ஏன்? – லோகேஷ் கனகராஜ் விளக்கம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் படங்கள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் சனவரி 26 அன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது,,,,,
ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம்.’கூலி’ படத்திற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்துப் பேசவேண்டும் என நினைத்து, தற்போதுதான் உங்களைச் சந்திக்கிறேன்.
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களைச் சந்திக்கிறேன்.
‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது.இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.வசூல் பற்றி நான் பேச விரும்பவில்லை.இது இலாபகரமான படம் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எங்களிடம் தெரிவித்து விட்டது.ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த திரைப்படம் 35 நாட்கள் ஓடியதற்கும் வசூலித்ததற்கும் ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.
சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தைப் பற்றிய விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது.என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.இப்படி கதை சொல்வதைதான் விரும்புகிறார்கள் என பல விசயங்களை நானும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் இடம்பெறச் செய்து, எதிர்மறை விமர்சனங்கள் அல்லாத படைப்புகளை அளிப்பதற்கு முயற்சி செய்வேன்.
‘கூலி’ திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் சாரையும், கமல்ஹாசன் சாரையும் சந்தித்தேன்.நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறோம்’ என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு.கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள் என்றால்,அது மிகப்பெரிய வாய்ப்பு.அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை என்னை இயக்கச் சொன்னதே எனக்குப் பெரிய விசயமாக இருந்தது.
அந்தச் சூழலில் ‘கைதி 2’ என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது.அதன்பிறகு இதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்லி இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதையும் சொல்லி அந்தப் படத்தை நிறைவு செய்துவிட்டு வருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன்.அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன்.கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள்.ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில்தான் நடித்துக் கொண்டே இருந்தனர்.தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2 ‘ மற்றும் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான்.அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர்.இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது.இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகிவிட்டேன்.
நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாததால்,’கைதி 2’ படத்திற்கான கால்ஷீட்டை நடிகர் கார்த்தி மற்றொரு இயக்குநருக்கு வழங்கி விட்டார். இதுதான் நடந்தது.
இதற்கிடையில் கிடைத்த நேரத்தில்,ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கியிருந்தேன்.அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தேன்.எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம்.எல்லாம் கூடி வந்ததால் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன்.
இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாகக் கேட்டதால் தான் ‘கைதி 2’ படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ.. அதற்கு ஏற்ற வகையில்தான் எனக்கு சம்பளம் தருவார்கள்.
கடந்த வாரம் ‘கைதி 2 ‘படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் ‘கைதி 2′ வாகத்தான் இருக்கும்.
இதற்கிடையில் எல்சியூ நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது.எல்சியூ என நான் பெயர் வைக்கவில்லை.இரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதைப் பின்தொடர்கிறேன்.இதை நான் மட்டும் முடிவு செய்து,இனி எல்சியூவில் படம் வராது என்று சொல்ல முடியாது.’கைதி 2′,’விக்ரம் 2′,’ரோலக்ஸ்’ இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட்.இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது.அதனால் எல்சியூ தொடர்கிறது.அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை நடக்கும்.எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் படமும் எல்சியூ வை சார்ந்ததுதான்.
நானும்,அமீர் கானும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவதாக இருந்தது.அந்த பேச்சுவார்த்தை தற்போதும் தொடர்கிறது.அவருக்கும் நிறைய திட்டமிட்ட பணிகள் இருக்கிறது.அதனால் இருவரும் நாளடைவில் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதில்…
எனது படங்களில் வெட்டுக்குத்து, அடிதடி, வன்முறை, இரத்தம், துப்பாக்கி சத்தம் அதிகமாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், நான் அதுபோன்ற படங்களைப் பார்த்து வளர்ந்தவன்.
என் படங்கள் போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாக மீது நீண்ட நாட்களாகக் குற்றச்சாட்டை வைக்கின்றனர். என்னுடைய படங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால்,போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால் சந்தோசமாக இருக்கலாம் என்று நான் எங்குமே சொல்லி இருக்கமாட்டேன். கமர்சியல் படங்களே செய்தாலும் எனக்கென்று ஒரு சமூக அக்கறை உள்ளது.அதை மீறி நான் எதுவும் செய்ததில்லை.
என்னுடைய ‘மாநகரம்’ படம் தொடங்கி ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ வரை எனக்கு கிடைத்த ஹீரோக்கள் மூலமாக போதைப் பொருட்களுக்கு எதிராக என்ன முடியுமோ அதை உரக்கப் பேசுகிறேன்.
எவ்வளவு தூரம் போதைக்கு எதிரான விழிப்புணர்வுகளுக்கு நான் ஆதரவு அளித்திருக்கிறேன் என்று எனக்குத்தான் தெரியும்.என் சார்பாக அவ்வளவு பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.கல்லூரி கல்லூரியாக சென்று இதை ஒரு பிரச்சாரமாகவே செய்து கொண்டிருக்கிறேன். 15 ஆயிரம் மாணவர்களை போதைப் பொருட்களை தொடமாட்டேன் என்று உறுதிமொழி எடுக்க வைத்திருக்கிறேன்.
கோவை காவல் ஆணையர் தலைமையில் போதைப் பொருட்களுக்கு எதிராக குறும்படப் போட்டி அறிவித்து அதில் வெற்றி பெறுபவரை என்னுடைய உதவிஇயக்குநராகச் சேர்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.அவர்கள் எல்லாம் இப்போது என்னுடைய உதவிஇயக்குநர்கள். இவ்வளவு விசயங்களை என் பக்கத்திலிருந்து நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இவையெல்லாம் நான் சினிமாவுக்காக செய்யவில்லை.ஆனால் நான் எவ்வளவு செய்தாலும் நாங்கள் நல்லதைப் பார்க்கவே மாட்டோம், கெட்டதைத்தான் பார்ப்போம் என்று சொன்னால் நான் என்னதான் செய்வது? அதுபோன்ற படங்களை இயக்குவதை நான் நிறுத்திவிட்டால், இங்கு எல்லாமே மாறிவிடும் என்றால்? இனி எனது படங்களில் அதுபோன்ற காட்சிகளை வைக்கமாட்டேன்.
இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘டிசி’ படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன்.இதுபற்றி ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்,விஜய் சேதுபதி ஆகியோரிடம் சொன்னேன்.அவர்கள் என்னை வாழ்த்தினார்கள்.இயக்குநர் பணியைவிட நடிப்பதுதான் மிகவும் கஷ்டமாக இருக்கிறது.என்னால் முடிந்த அளவுக்கு நடித்து வருகிறேன்.அடுத்த படத்தை இயக்கிய பிறகு ஓய்வு கிடைத்தால் வேறு படத்தில் நடிப்பேன்.
இயக்குநர் எச்.வினோத் கேட்டுக் கொண்டதால்,‘ஜனநாயகன்’ படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன்.
இவ்வாறு லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.











