செய்திக் குறிப்புகள்

வேறு வழியில்லாமல் ஆங்கிலத்தில் பெயர் வைத்தோம் – தயாரிப்பாளர் வருத்தம்

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது.
இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார்.நாயகியாக நதியா நடித்துள்ளார்.

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.என்.நாகராஜ் தயாரித்துள்ளார்.

இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சனவரி25 அன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவுக்குப் படக்குழுவினர் அனைவரும் தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திருந்தார்கள்.

அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள தயாரிப்பாளர் நாகராஜன் அனைவரையும் வரவேற்றார். அவர் பேசும்போது……

இந்த இயக்குநரை 2023இல் வேலூரில் சந்தித்தேன். அவர் ஒரு கதையைச் சொன்னார்.நீங்கள்தான் தயாரிப்பாளர் என்றார்.எனக்கு உடனே ஒன்றும் சொல்ல முடியவில்லை.யோசித்துச் சொல்கிறேன் என்றேன். ஆறுமாதம் போனது.இதை என் மனைவியிடம் கூறிய போது செய்யலாம் என்றார்.2024ஆகஸ்ட் 15 இல் படம் பூஜை போடப்பட்டது.அப்படியே படக்குழு உருவாகி இந்தப்படத்தை முடித்து விட்டோம்.இயக்குநர் நல்ல திறமைசாலி,உழைப்பாளி.அவரைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தாலும் படத்தில் வசனங்கள்,பாடல்கள் எல்லாம் முடிந்தவரை தமிழில் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்.வேறு வழியில்லாமல்தான் தலைப்பை ’ப்ராமிஸ்’ என ஆங்கிலத்தில் வைத்தோம்.இப்போது படம் முடிந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது. மக்களை நோக்கித் தேர்வு எழுதுவது போல் ஒரு மன நிலையில் இருக்கிறோம்.இந்தப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.முடிவு மக்கள் கையில் இருக்கிறது. இந்தப்படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்தார்கள்,ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.அதை மறக்கமுடியாது.தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள்.அனைவருக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் பாலா பேசும்போது,

இப்போது வருகிற படங்களில் நல்லபாட்டு இல்லை என்கிற குறை,வருத்தம் இருக்கிறது.உண்மை என்னவென்றால் அதற்கான நல்ல பாடலாசிரியர்களும் இசை அமைப்பாளர்களும் இருக்கிறார்கள்.ஆனால் அதற்கான களங்கள் குறைந்து வருகின்றன.நல்ல வாய்ப்பு கொடுத்தால் நல்லபாடல்கள் வரும். திரைப்படங்களில் பாடல்களை ஸ்பீட் பிரேக்கர் என்று சொல்கிற போக்கு இருக்கிறது.பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர் அல்ல,அவை படங்களுக்கு மைலேஜ் என்றுதான் சொல்லவேண்டும்.
‘குணா’ படத்தின் பாடல் காலம் கடந்தும் இரசிக்கப்படுகிறது.அது ஓர் அடையாளமாக இருக்கிறது ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஓர் அடையாளமாக மாறி இருக்கிறது.இப்படிப் பாடல் ஒரு படத்தைக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கும்.இந்தப்படத்தில் பாடல் எழுதியது நல்ல அனுபவம் என்றார்.

எடிட்டர் ஸ்ரீராம் விக்னேஷ் பேசும் போது,

இந்தப்படத்தின் ட்ரெய்லரில் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்தது போல் ஒரு விஷயத்தை மறைத்து இருக்கிறோம்.படத்தில் உள்ளதெல்லாம் ட்ரெய்லரில் வரவில்லை.படம் பார்க்கும்போது அது தெரியும் என்றார்.

இயக்குநர் அருண்குமார் சேகரன் பேசும்போது,

எங்களுக்கு எந்தப் பின்புலமும் இல்லை,இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரங்களோ பிரமாதமான பட்ஜெட்டோ கிடையாது.எங்களைத் தூக்கி விடுவதற்கு ஆட்கள் இல்லை.அப்படி இருக்கும்போது இங்கே பேரரசு, கே ராஜன் போன்றவர்கள்தான் ஆதரவாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மக்களுக்குச் சினிமா மிகவும் பிடிக்கும்.நன்றாக இருந்தால் சினிமாவைக் கொண்டாடுவார்கள்.நன்றாக இல்லை என்றால் விமர்சனமும் பலமாக செய்வார்கள்.நான் ஊடகத்தில் 2015 – லிருந்து 21 வரை வேலை பார்த்தேன். பிறகு ஒரு பைலட் பிலிம் எடுத்தேன்.நண்பர்கள் ஆதரவாக இருந்தனர்.’வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்’ என்ற அந்த ஒருமணி நேரப் படத்தை எடுத்து எங்கள் பகுதியில் எல்இடியில் திரையிட்டேன்.அதிலிருந்து நகர்ந்து இந்தப்படத்தின் தயாரிப்பாளரைச் சந்தித்து இந்த நிலைக்கு வந்து நிற்கிறேன்.
இதை விளம்பரப்படுத்துவதற்கு ஹெச்.வினோத் சாரின் உதவியைக் கேட்டோம்.உதவுவதாகச் சொன்னார். அவருக்கு நன்றி.ஆனால் அவர்ரே ’ஜனநாயகன் ’ பிரச்சினையில் இருக்கும்போது நாங்கள் எப்படிக் கேட்பது?அதனால் அவரை வைத்து எதுவும் செய்ய முடியவில்லை.இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்ட இயக்குநர் சேரன் சார்,மற்றும் நட்டி சாருக்கு நன்றி.
நாங்கள் அதிக ஆட்கள் இல்லாமல் 12 பேர் மட்டும் கொண்ட குழுவாக இருந்து பல வேலைகளையும் செய்தோம்.இந்தப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறோம்.ஒரு கட்டத்தில் இந்தப்படம் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற பயம் இருந்தது.அந்த கஷ்டமான காலத்தில் அப்போது கதாநாயகி நதியா கைகொடுத்து உதவினார்.அதை மறக்கமுடியாது.இப்படிப் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்

இசையமைப்பாளர் சரவண தீபன் பேசும்போது,

இது எனக்கு முதல்படம் முடிந்தவரை செய்திருக்கிறேன். அனைவரும் ஆதரவு தரவேண்டும்என்றார்.

நடிகர் காதல் சுகுமார் பேசும்போது….,

நான் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதைப்பற்றி இங்கே குறிப்பிட்டபோது,
எனக்கே திடுக்கென்று இருந்தது.சினிமாவில் நான் சாதிக்கவில்லை என்றாலும் சினிமாவில் இவ்வளவு நாள் இருப்பதே ஒரு சாதனைதான்.இந்தப்படக்குழுவினரை வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

சத்தியம் என்ற வார்த்தைக்கு ஒரு மதிப்பு உள்ளது. ஒரு காலத்தில் சத்தியம் செய்துவிட்டால் அதைப் பெரிதாக நினைப்பார்கள்.அது இப்போது மாறிவருகிறது.சிலர் அப்படி நடந்து கொள்வதில்லை.அவர்களைப் பார்த்து அப்போது சொல்வார்கள் ’சத்தியம் அவனுக்குச் சர்க்கரைப் பொங்கல்’ என்பார்கள்.
நான் படிக்கும்போது புத்தகத்தின் மீது சத்தியம் பண்ணச் சொல்வார்கள்.தவறாகச் சத்தியம் செய்தால் படிப்பு வராது என்று பயந்தார்கள்.கணவன் மனைவிக்குள் சண்டை வந்தால் குழந்தை மீது சத்தியம் பண்ணச் செல்வார்கள்.இன்று சத்தியத்துக்கு யாரும் பயப்படுவதில்லை.அதனால்தான் நாட்டில் இவ்வளவு வன்முறைகள்,அநியாயங்கள் நடக்கின்றன.நாடு மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இந்தப்படத்தில் இயக்குநர்தான் கதாநாயகன்.ஆனால் இங்கே கதாநாயகி வரவில்லை.
இங்கே ஒரு படம் ஆரம்பிக்கும்போதே கதாநாயகன்,கதாநாயகியிடம் பட விழாக்களுக்கு வருவேன் என்று படத்தின் மீது சத்தியம் வாங்கவேண்டும்.
நீண்டநாள் கழித்துதான் இப்படிப் பார்க்கிறோம் இங்கே திரையிடப்பட்ட மூன்று பாடல்களுமே ஈர்ப்பாக உள்ளன. பாடல்களும் சரி,வரிகளும் சரி நன்றாக உள்ளன.சில இசை கொண்டாட வைக்கும்; சில இசை இதயத்துக்கு நெருக்கமாக இருக்கும்.அப்படி இதயத்திற்குப் பாலமாக இருக்கும்படி இந்தப் பாடல்களும் இசையும் இருந்தது. இசையமைப்பாளர்,பாடலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ட்ரெய்லர் பார்க்கும்போது கதை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.இந்தப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி தலையில் அடிக்கடி அடித்துச் சத்தியம் செய்வதைப் பார்க்கும்போது ஏதோ கதையில் இருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.அதிக சத்தியம் செய்பவன் ஆபத்தானவன்.படத்தில் செய்யும் சத்தியங்களைப் பார்க்கும்போது கதை விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
’முந்தானை முடிச்சு’ படத்தில் பாக்யராஜ் மீது ஊர்வசி ஒரு பழி செல்லும்போது குழந்தையைத் தாண்டச் சொல்வார்.ஊர்வசியும் பொய் சத்தியம் செய்து தாண்டி விடுவார்,அதற்குப் பிறகுதான் படத்தின் கதையே ஆரம்பிக்கும்.அதுபோல் இதிலும் சத்தியத்திற்குப் பிறகு வரும் சத்திய சோதனை இருக்கும் என்று நினைக்கிறேன்.
சின்ன திரைப்படங்கள் என்றாலே நல்லகதைதான் முக்கியம்.பெரிய நடிகர்களோ பெரிய செலவுகளோ இல்லாத பட்சத்தில்நல்ல கதையை நம்பித்தான் படம் எடுக்க வேண்டும். நல்லகதை,வித்தியாசமான கதை இருந்தால்தான் அது சிறந்தபடம்.கமர்சியல் படம் என்பது வேறு சிறந்தபடம் என்பது வேறு.வணிகத்திற்குத் தேவையான கதை,வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று இரண்டு உண்டு.’ப்ராமிஸ்’ திரைப்படம் வாழ்க்கைக்குத் தேவையான கதை என்று நினைக்கிறேன்.
மக்கள் சின்னபடங்களைப் பார்க்க வருவதற்குப் பயப்படுகிறார்கள்அதற்குக் காரணம் சில சின்னப் படங்கள்தான்.அனுபவம் இல்லாதவர்கள் படம் எடுக்கிறார்கள்.அது பார்க்கும்படியாக இருப்பதில்லை. ஆனால் இந்தப்படம் ஒரு நம்பிக்கையைத் தருகிறது.எந்தப்படம் வந்தாலும் இது ஓடும் என்கிற நம்பிக்கையைத் தருகிறது.அந்த அளவிற்குக் கதை உள்ளது.
இன்று ரீரிலீஸ் படங்களுக்கு உள்ள வரவேற்பு ,நேரடிப் படங்களுக்கு இல்லாமல் இருக்கிறது.’படையப்பா’ ரீரிலீஸ் வந்தது; ஓடியது.இப்போது ‘மங்காத்தா ‘ வந்திருக்கிறது.நாலு நாட்களுக்குத் திரையரங்குகள் நிரம்பிவிட்டன.அதனால் புதிய நேரடிப் படங்கள் திணறுகின்றன.இப்போது ‘திரௌபதி 2’வந்திருக்கிறது.நல்ல விதமாகவே அதைப்பற்றிப் பேசுகிறார்கள்.ஆனால் வசூலில் திணறுகிறது.
இதுபற்றி மோகன் ஜி தைரியமாகப் பேசுகிறார். ‘மங்காத்தா’ வை விட ‘திரௌபதி 2’ வசூல் குறைந்துவிட்டது என்கிறார்.அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும்.’மங்காத்தா’அளவிற்கு தன் படத்திற்கு வசூல் இல்லை என்று தைரியமாகச் சொல்கிறார் யாருக்கு அந்தத் தைரியம் வரும்?படம் வெளியான இரண்டாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறார்கள்.
ஆனால் மோகன் ஜி மங்காத்தாவுடன் வந்தது தவறு, தன் படத்திற்கு வசூல் இல்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறார்.அவரது தைரியத்தைப் பாராட்ட வேண்டும். அதுவும் மூன்றாவது நாளில் பேட்டி கொடுக்கிறார் என்றால் அவரது தைரியத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
பொய்யாக என் படம் வெற்றி, இரண்டாவது நாள் வசூல்,மூன்றாம் நாள் வசூல் என்றெல்லாம் அவர் சொல்லவில்லை.ஓபன் ஸ்டேட்மெண்டாக வெளிப்படையாகக் கூறுகிறார்.ஆனால் மக்களிடம் படம் நன்றாக இருக்கிறது என்று பேச்சு இருக்கிறது.ஒரு சின்னபட்ஜெட்டில் படம் இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே என்று பேசிக்கொள்கிறார்கள்.
ஏனென்றால் மக்கள் சின்னப்படங்களுக்கு வருவதற்குத் தயங்குகிறார்கள்.அதைவிட ஏற்கெனவே வெற்றியடைந்த ’மங்காத்தா’விற்குச் செல்கிறார்கள்.
சின்னப்படத்தைப் பார்ப்பதற்குப் பயத்தைத் தமிழ் திரையுலகில் யார் கொடுத்தது?
எப்போதும் கே.ராஜன் சார் தயாரிப்பாளர்கள் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார்.
’எஜமான்’, ’மன்னன்’, ’தெறி’ போன்ற ரஜினி, விஜய் படங்கள் ரீ ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.சின்னப்படங்கள் வரும்போது ரீரிலீஸ் வந்தால் எழும் பிரச்சினைகளுக்கு வழி காண வேண்டும்.அதற்குரிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்.ஏற்கெனவே ‘மங்காத்தா’ ஓடிய படம் தான். அது மறுபடியும் ஓடினாலும் ஓடவிட்டாலும் பிரச்சினை இல்லை.அது ஏற்கெனவே வெற்றிப்படம் தான். ’படையப்பா’ ஓடாவிட்டால் ரஜினி மார்க்கெட் ஒன்றும் ஆகாது.’மங்காத்தா’ ஓடாவிட்டால் அஜித்துக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.ஆனால் நேரடிப் படங்களுக்கு வெளியீடு என்பது பெரிய வாழ்க்கைப் பிரச்சினை.இன்னும் ரஜினி படங்கள்,விஜய் படங்கள் வெளியாகத் தயாராக இருக்கின்றன.ரீரிலீஸ் என்பது அவர்களுக்கு ஃபேண்டஸி.நேரடிப் படம் வெளியீடு என்பது இவர்களுக்கு வாழ்வாதாரம்.
சினிமாவில் இருந்து கொண்டு நாம் கவலைப்பட வேண்டிய இன்னொரு விஷயம் ’ஜனநாயகன்’.ஒரு படம் சென்சார் பிரச்சினையில் இத்தனை நாள் இழுத்துக் கொண்டிருப்பது என்பதைக் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. எல்லாவற்றையும் விட்டு விடுங்கள் அது ஒரு படம்.ஒரு படம் என்கிறபோது சென்சார் என்ன செய்ய வேண்டும்? வன்முறை என்றாலோ ஆபாசமாகஇருக்கிறது என்றாலோ அனுமதிக்க மாட்டார்கள். வெட்டச் சொல்வார்கள். அவை கூடுதலாக இருந்தால் ‘ஏ: சான்றிதழ் கொடுப்பார்கள்.கொடுத்து ரிலீஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்பார்கள்.இவ்வளவு தானே விஷயம்? கட் பண்ணச் சொன்னால் கட் பண்ணமுடியாது என்று சொன்னால்தான் பிரச்சினை.இதில் என்ன பிரச்சினை? நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.ஒரு திரைப்படம் சென்சருக்குப் போய் ஏன் இத்தனை நாள் வெளியிடப்படாமல் இருக்கிறது? மத்திய அரசுக்கும் சென்சாருக்கும் நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். மத்திய அரசுக்கு ஆயிரம் கோடிக்கு மேலாக இங்கிருந்து சினிமா வரிப்பணம் உங்களுக்கு வருகிறது,இது டிக்கெட்டில் இருந்து மட்டுமே வருகிறது. நடிகர்கள்,நடிகைகள் 200 கோடியில் இருந்து 50 கோடி என்று வாங்குகிறார்கள்.அதிலிருந்து சம்பளத்திலிருந்து இன்னொரு ஆயிரம் கோடிக்கு மேல் உங்களுக்கு வரிப்பணம் வருகிறது.இப்படி.அந்தப் பணத்திலிருந்து தான் சென்சார் போர்டுக்கு சம்பளம் கொடுக்கிறீர்கள்.அதைத் தயவுசெய்து மனதில் வையுங்கள்.ஒரு திரைப்பட வெளியீடு ஒரு மாதம் தாண்டியும் முடிவுக்கு வரவில்லை என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசும் தணிக்கைத் துறையும் யோசிக்க வேண்டும்.
இது ஏதோ ’ஜனநாயகன்’ படத்திற்கும் விஜய் படத்திற்கும் இருக்கின்ற பிரச்சினைதான் என்று மற்றவர்கள் சும்மா இருக்கக்கூடாது.நாளை நமக்கும் வரும்.எனவே இதற்குக் குரல் கொடுக்கவேண்டும். ’ஜனநாயகன்’ விஷயம் நீதிமன்றம் சென்றிருக்கிறது.அங்கே சென்றால் வெளிப்படைத் தன்மை வேண்டும் அல்லவா?’ஜனநாயகன்’ படத்தைத் தணிக்கை செய்து விரைவில் வெளிவரவேண்டும். காத்திருக்கிறோம்.நன்றி வணக்கம் என்றார்.

தயாரிப்பாளர் (கில்டு) சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது ,

நான் வர்மக்கலை கற்றுக் கொள்ளும்போது எங்கள் வாத்தியார் என்னிடம் என் ஆள்காட்டி விரலில் பிளேடால் கீறி,’ இது சத்தியம் என் உயிருக்கு ஆபத்து என்று வந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்துவேன்’ என்று வெற்றிலையில் எழுதி சத்தியம் வாங்கினார்.அதற்கு இன்றுவரை பயந்து கொண்டிருக்கிறேன். பயன்படுத்துவதற்கும் பயம்,சொல்லிக் கொடுப்பதற்கும் பயம்.சத்தியம் என்ற வார்த்தைக்கு உள்ள பலம் பிராமிஸுக்குக் கிடையாது. அம்மா என்ற வார்த்தைக்குள்ள பலம் மம்மிக்குக் கிடையாது.
‘ ப்ராமிஸ்’ படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன் நன்றாக உள்ளது.படக் குழுவினருக்கு
வாழ்த்துக்கள் என்று கூறி வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது,

இங்கே விழாவில் தயாரிப்பாளர் ஆரம்பத்தில் பேசும்போது அனைவருக்கும் நன்றி கூறினார். ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கும் கொடுக்காதவர்களுக்கும் நன்றி என்று ஒருவரையும் விடாமல் நன்றி கூறினார்.அதுதான் தமிழ்ப்பண்பாடு. அதேபோல இங்கே குத்துவிளக்கேற்றினார்கள்.இருள் விலகவேண்டும் ஒளி பெருகவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் விளக்கேற்றுகிறார்கள்.அதுவும் தமிழ்ப்பண்பாடு தான்.அப்படிப் பண்பாட்டை மறக்காமல் வந்திருந்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.அப்படி ஒரு அற்புதமான தயாரிப்பாளர்,இயக்குநர் இங்கே வந்திருக்கிறார்கள்.நல்ல ஒரு திருப்தியான படத்தின் ட்ரெய்லரையும் பாடல்களையும் பார்த்தோம். அருமையான பாடல்களைப் போட்டுக் காட்டினார்கள், பாடல்கள்,காட்சிகள்,எடிட்டிங் எல்லாமே நன்றாக உள்ளது என்று அனைவரும் சொன்னார்கள்.ஆனாலும் படம் வெற்றி பெற வேண்டும்.உண்மையாக வாழ்த்த வேண்டும் என்றுதான் நாங்கள் வந்திருக்கிறோம். அதற்காகவே அவர்களை வாழ்த்துகிறேன்.இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்.நிச்சயம் இந்தத் தயாரிப்பாளர் அடுத்தபடம் எடுப்பார்.எடுத்தால் சினிமாவுக்கு லாபம் ; தொழிலாளர்களுக்கு லாபம்.
தமிழ்சினிமாவில் பழிவாங்குவதற்கு என்றே சில காரியங்கள் நடக்கின்றன.’ஜனநாயகன்’ படம் .அதன் கதாநாயகன் பெரிய கதாநாயகன்.அவர் சாதாரணமாக நடித்து இருந்தால்,இந்தப் பிரச்சினை வந்திருக்காது அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்து நான்தான் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவேன் என்று அடம்பிடித்தார் அல்லவா? அதில் பிடித்தது பிரச்சினை.யாருமே எடுத்ததுமே நானே முதலமைச்சர் ஆவேன் என்று சொன்ன வரலாறு கிடையாது.கட்சி ஆரம்பிக்கலாம் தவறில்லை, தேர்தலில் நின்று மக்களிடம் பிரச்சாரம் செய்து ஓட்டு வாங்கி மக்கள் பெருவாரியான எம்எல்ஏக்களைத் தேர்ந்தெடுத்துப் பெரும்பான்மை வந்து அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால்,முதல்வர் ஆகலாம். எடுத்தவுடனேயே நான் முதலமைச்சராகவேன் என்று யாரும் சொன்னதில்லை.அப்புறம் ஐம்பது அறுபது ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்கள் என்ன ஆவார்கள்? அதில் யாருக்கோ ஒருவருக்கு காழ்ப்புணர்ச்சி வந்துவிட்டது.கூட்டணிக்குக் கூப்பிட்டுப் பார்த்தார்கள்.இல்லை,நான் தனியேதான் நிற்பேன் என்றார்.தனியேதானே நாங்கள் ஜனநாயகனைப் பார்த்துக் கொள்கிறோம் என்று பிரச்சினை செய்கிறார்கள்.
யார் என்ன என்பதைப் பற்றி நான் சொல்லவில்லை. ஒரு படம் எடுத்து முடித்தாகி விட்டது.கதாநாயகனுக்கு மட்டும் 250 கோடி மீதி 100 கோடி ரூபாய் படம் எடுக்கும் செலவு.இப்படி படம் முடிந்துவிட்டது.ஒரு தயாரிப்பாளர் செலவுகளைச் செய்துவிட்டார்.இப்போது கஷ்டம் யாருக்கு?தயாரிப்பாளருக்குத்தான்.கதாநாயகன் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.கதாநாயகன் படம் வரவில்லை என்று வருத்தப்படுவார்; பணம்வரவில்லை என்று வருத்தப்படுவாரா? பணம் வாங்கிவிட்டார்.எப்போதோ கொடுத்து விட்டார்கள். அதனால் அவருக்கு எந்த சிரமமும் இல்லை.ஆனால் பணம் போட்ட தயாரிப்பாளர் நிறுத்தப்படுகிறார்.அதில் எந்த நியாயமும் இல்லை. இப்படிப் பழிவாங்குவதற்கு நியாயமே இல்லை. இது பழிவாங்குதல் ஒன்றுதான்.இதில் பணம் போட்ட முதலாளி அவஸ்தைப்படுகிறார்.
டிசம்பர் 19 படம் பாக்கிறார்கள்.டிசம்பர் 22 இல் சர்டிபிகேட் கொடுக்கப்பட வேண்டும் என்றால் சில கட் கொடுக்கிறார்கள்.சர்டிபிகேட் 24 ஆம் தேதி வரும் என்று நம்பினால் வரவில்லை.பதிலே இல்லை. சென்சார் போர்டு பதில் சொல்லவில்லை.நீதிமன்றம் சென்றால்,பதிலே இல்லை.இது ஒரு அரசியல் பழிவாங்குதல் இல்லையா?
நாளையே அவர் இந்தக் கட்சியுடன் கூட்டணி என்று சொல்லட்டும் நாளை சாயந்திரம் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு சர்டிபிகேட் போய்விடும்.இதெல்லாம் அரசியல் விளையாட்டுகள்.இது தவறு.இதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை.ஏனென்றால் அவர்களுக்குக் கஷ்டம் வரும்போது அவர் யாருக்கும் குரல் கொடுத்ததில்லை. அதனால் அவருக்கும் யாரும் கொடுக்கவில்லை. எல்லாரும் அவரைக் கைவிட்டு விட்டார்கள்.தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும் இதைக் கண்டித்து மாநில அரசின் மீது குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. முதலமைச்சர் கூட இப்படி செய்யக்கூடாது என்று ட்விட்டரில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.இதற்கு மத்திய அரசுதான் காரணம்.
எந்த அரசாங்கம் இருந்தாலும் ஜனநாயகனின் பிரச்சினையை முடித்து நீதிமன்றப் பிரச்சினையை முடித்து படத்தை வெளியிட்டு, தயாரிப்பாளர் காப்பாற்றப்பட வேண்டும்.அதான் என்னுடைய நோக்கம். அவர் அடுத்த படம் தயாரித்து ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைகொடுக்க வேண்டும்.’ஜனநாயகன்’படம் விரைவில் வரவேண்டும்.உங்கள் அரசியலுக்காக சினிமாவைப் பழி வாங்காதீர்கள்.
சத்தியமாகச் சொல்கிறேன் இந்த ‘ப்ராமிஸ்’ படம் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.படக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

விழாவில் ‘ப்ராமிஸ்’ படக்குழுவினருடன் வேலூர் பகுதியில் இருந்து திரளாக வந்திருந்த பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Posts