சினிமா செய்திகள்

மண் மணக்கும் தமிழர் இயக்குநர் சேரன் பிறந்தநாள் இன்று

பணம்,புகழ் ஆகியனவற்றைச் சம்பாதிக்கும் களமாக திரைத்துறையைப் பார்ப்போர் மத்தியில்  சமுதாய அக்கறையோடு  படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் சேரன்.

மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, 1965 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன், வெள்ளலூர் திரையரங்கத்தில் படம் ஓட்டுநராகப் பணி புரிந்தார். தாயார் கமலா தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். 

திரைத்துறையில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சேரன், 1997 ஆம் ஆண்டு இயக்குநரானார்.

அவருடைய முதல்படம் பாரதிகண்ணம்மா. பார்த்திபன் மீனா உள்ளிட்டோர் நடித்த அந்தப்படம் பெரிய வெற்றிப்படம். அதோடு சமுதாயத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது. சாதி வெறி பிடித்தவர்களையும் கூட நாமும் இப்படித்தானே இருக்கிறோம் என்று எண்ண வைத்தது அந்தப்படத்தின் மாபெரும் வெற்றிக்குச் சிறந்த சான்று.

அடுத்துவந்த பொற்காலம், மாற்றுத்திறனாளிகள் பற்றிய பொதுப்புத்தியை மாற்றிய மாற்றுச்சிந்தனைப் படமாக அமைந்தது.

அடுத்தடுத்து வெளியான அவருடைய படங்கள் வசூல் ரீதியான வெற்றி தோல்வி ஆகியனவற்றைத் தாண்டி சமுதாயத்தில் தாக்கங்களை உருவாக்கின.

நடிகராகவும் அவதாரம் எடுத்து வெற்றி பெற்ற அவருடைய ஆட்டோகிராஃப் அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தியது என்றால், தவமாய் தவமிருந்து, அச்சு அசலான தமிழ்ச் சமூக வாழ்க்கையை இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த படம். 

சொந்தமாகப் படங்கள் தயாரித்து திரைப்பயணத்தில் சில சறுக்கல்களைச் சந்தித்தாலும் ஒரு படைப்பாளியாக மக்கள் மனதில் நிறைந்திருக்கிறார்.

அண்மையில் வெளியான அவருடைய திருமணம் பட வெளியீட்டின்போது மக்கள் மனதில் அவருக்கு எவ்வளவு பெரிய இடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியது.

அதேபோல அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, இவர் இப்படிச் செய்யலாமா? என்று ஏராளமானோர் ஆதங்கப்பட்டனர். சிறந்த கலைஞன் என்று ஏற்றுக்கொண்டதாலேயே இவ்வளவு ஆதங்கம்.

சமுதாய அக்கறையுடன் ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்கள் உட்பட ஏராளமான போராட்டங்களில் பங்குபெற்றவர்.

அவர் நடிப்பில் தயாராகி விரைவில் வெளியாகவிருக்கும் ராஜாவுக்கு செக் படத்தில் இதுவரை பார்த்திராத புதிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதிலும் தற்போதைய இளம் சமூகத்துக்கு நல்வழி காட்டும் படமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள்.

தமிழ்ச்சமூகத்தின் அடையாளங்களில் ஒருவராகத் திகழும் மண்மணக்கும் தமிழர் சேரனுக்கு இன்று பிறந்தநாள்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.

– அ.தமிழன்பன் 

 

Related Posts