December 6, 2024
சினிமா செய்திகள்

கருடன் படத்துக்கு 550 திரையரங்குகள் – படக்குழு மகிழ்ச்சி

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த முதல்படம் விடுதலை.அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றதுடன் சூரிக்கு மிகுந்த நற்பெயரையும் பெற்றுத்தந்தது.

அதைத் தொடர்ந்து விடுதலை 2 மற்றும் கொட்டுக்காளி ஆகிய படங்கள் அவருக்கு இருக்கின்றன.

இவற்றோடு இயக்குநர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும்’கருடன்’திரைப்படமும் வெளியீட்டுக்குத் தயாராகியிருக்கிறது.

இப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.‌ இவர்களுடன் சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ஷிவதா நாயர், மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கிறார்.

ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பிரதீப் ஈ.ராகவ் படத்தொகுப்புப் பணிகளைக் கையாள, ஜி.துரைராஜ் கலை இயக்கப் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.‌இந்தத் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பெயர் மற்றும் முதல்பார்வை ஆகியனவற்றோடு ஒரு பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் நேற்று இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி மே 31 ஆம் தேதி உலகெங்கும் இப்படம் வெளியாகவிருக்கிறது.

மார்ச் இறுதியிலேயே வெளியாக வேண்டிய இந்தப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகக் காரணம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடந்ததால் வெளியீட்டைத் தள்ளி வைத்திருந்தனர்.

இப்போது அங்கும் தேர்தல் முடிந்ததால் படம் வெளியீட்டை அறிவித்திருக்கின்றனர்.

அது படத்துக்கு நன்மையாக அமைந்திருக்கிறது. அந்தத் தேதியில் வெளியாகும் ஒரே பெரிய படம் இது என்பதால், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐநூற்றைம்பது திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று விநியோகஸ்தர்களும் திரையரங்குக்காரர்களும் கூறுகின்றனர்.

இதனால் இந்தப்படத்தின் வசூல் இயல்பாகவே அதிகரிக்கும் என்கின்றனர்.

Related Posts