December 6, 2024
சினிமா செய்திகள்

சசிகுமாரின் குற்றப்பரம்பரை டிராப் – விவரங்கள்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் இயக்குவதாகச் சொல்லப்பட்ட குற்றப்பரம்பரை கைவிடப்பட்டுவிட்டது.

அதுகுறித்த விவரம்….

தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட கதை குற்றப்பரம்பரை. இக்கதையை தமிழ்த்திரையுலகின் முன்னணி இயக்குநர்களான பாரதிராஜா, பாலா ஆகியோர் படமாக்கப் போவதாகச் சொன்னார்கள்.

வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலாவும், இரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு இதனால் பரபரப்பும் சர்ச்சையும் ஏற்பட்டது.

குற்றப் பரம்பரை, சட்டத்தை எதிர்த்து தம் உயிரைத் துச்சமென மதித்து, நிராயுதபாணிகளாகப் போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிர்நீத்த தியாகிகளின் போராட்டம் தொடர்பாக பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை மையமாகக் கொண்டு இயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயிரோட்டமாகவும் இயக்க இருப்பதாக அறிவித்தார்கள்.

அதற்காக, தேனியில் பெரிய அளவில் தொடக்கவிழாவெல்லாம் நடத்தினார்கள்.உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.

ஆனால் அதோடு அப்படியே நின்று போனது.

இது நடந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது குற்றப்பரம்பரை கதையை இணையத் தொடராக எடுக்கவிருக்கிறார்கள். அதைத் தயாரிப்பவர் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதை இயக்குபவர் சசிகுமார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமார் இயக்கவிருக்கிறார் என்பதால் இது கவனம் பெற்றது. தொடக்கத்தில் பாரதிராஜா வசமிருந்த குற்றப்பரம்பரை பெயர் சசிகுமாருக்குக் கிடைக்கவில்லை என்றார்கள். அதன்பின் சமரசம் ஏற்பட்டு அந்தப் பெயர் சசிகுமாருக்குக் கிடைத்தது.

இத்தொடரில் சத்யராஜ்,தெலுங்கு நடிகர் ராணா டகுபதி, இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் உள்ளிட்ட பெரிய நடிகர் பட்டாளம் களமிறங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இத்தொடரின் படப்பிடிப்பு அக்டோபரிலிருந்து முழுவீச்சில் தொடங்கும் என்று சொன்னார்கள்.அதன்பின் நவம்பரில் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் நடக்கவில்லை. டெஸ்ட் ஷூட் எனப்படும் சோதனை படப்பிடிப்பு மட்டும் நடந்திருக்கிறது.

அதன்பின் இதை அப்படியே விட்டுவிட்டு புதியபடத்தில் நடிக்கப் போய்விட்டார் சசிகுமார்.

என்னவாயிற்று?

இது தொடர்பாக ஒரு பேராசிரியர் வழக்குத் தொடர்ந்துவிட்டார். அதனால் அவரை சமாதானம் செய்யவேண்டும் அல்லது அந்த வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் எனகிற கட்டாயம ஏறபட்டது.

அதற்கான முயற்சிகளில் தயாரிப்பு நிறுவனத்தினர் இறங்கினார்கள். சுமார் ஆறேழு மாதங்கள் ஆகியும் அதில எந்த முன்னேற்றமும் இல்லை.

எனவே இதை தயாரிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஹாட் ஸ்டார் நிறுவனம் பின்வாங்கிவிட்டதாம்.

இதனால் சசிகுமார், வேல்ராஜ் உள்ளிட்டோருக்கு அதிர்ச்சி.

அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டு அவையும் பலிக்கவில்லையாம். இதனால் குற்றப்பரம்பரையைக் கைவிட்டுவிடுவது என முடிவெடுத்து அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அறிவித்தும் விட்டார்களாம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமார் இயக்கவிருந்த படைப்பின் நிலை கடைசியில் இப்படியாகிவிட்டது அனைவருக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கிறது என்கிறார்கள்.

Related Posts