அட்லீ அல்லு அர்ஜுன் ஆகியோரின் சம்பளம் எவ்வளவு – வியக்க வைக்கும் விவரம்
அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிக்கிறார்.அந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை வெளியிடப்பட்டது.
புஷ்பா படத்தின் மூலம் சர்வதேசத் திரையுலகத்தினரின் ஈர்த்தவர் அல்லு அர்ஜுன். ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தியளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் அட்லி – முன்னணி இந்திய படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் – ஆகியோரின் கூட்டணியில், பான் உலகப் படைப்பாக, இந்திய திரைத்துறை கண்டிராத பிரம்மாண்டமாக உருவாகவுள்ள புதிய படத்தைப் பற்றிய ‘#AA22xA6’ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்திய சினிமாவின் முத்தான மூன்று பிரம்மாண்டங்களும் ஒன்றிணையும் இந்தத் திரைப்படம் – இந்தியாவில் தயாராகும் சர்வதேசத் தரத்துடனான உலகத் திரைப்படமாக இருக்கும்.
இப்படத்தில், நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கூட்டணியில் உருவாகவிருந்த இந்தப்பட அறிவிப்பு தள்ளிப்போகக் காரணம் இயக்குநர் அட்லியின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடையாததுதான் என்று சொல்லப்பட்டது.
இப்போது அறிவிப்பு வந்துவிட்டது என்பதால் அந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
என்ன முடிவு எட்டப்பட்டது?
இந்தப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன், சம்பளமாக ஒரு ரூபாய் கூடப் பெறாமல் படத்தில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார்.படத்தை முழுமையாக முடித்து வியாபாரம் செய்யும்போது படத்தின் செலவு போகக் கிடைக்கும் இலாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கு சுமார் முப்பது விழுக்காடு இலாபத்தில் பங்கு என்று சொல்லப்படுகிறது.
அட்லி இந்தப்படத்தை இயக்க சுமார் ஐம்பத்தைந்து கோடி சம்பளம் கேட்டார் என்பதால்தான் சிக்கல் எழுந்தது.இப்போது அவரும் சம்பளம் வாங்காமல் பணிபுரிவது இலாபத்தில் பங்கு வாங்கிக் கொள்வது என்பதற்கு ஒப்புக்கொண்டாராம்.
அவர் சுமார் இருபது விழுக்காடு பங்கு கேட்டார் என்றும் தயாரிப்பு நிறுவனம் முதலில் பத்து என்று சொல்லி இறுதியில் சுமார் பதினைந்து விழுக்காடு பங்கு தர ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
அப்படியானால் இவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
இந்தப்படத்தின் மொத்த செலவுத் தொகை சுமார் அறுநூறு கோடி என்று திட்டமிடப்பட்டிருக்கிறதாம்.போகப்போக செலவு கூடினாலும் சுமார் எழுநூறு கோடிக்குள் படத்தை முடித்துவிடக்கூடும்.
அதன்பின் இந்தப்பட வியாபாரம் சுமார் ஆயிரத்து ஐநூறு கோடிவரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடந்தால் சுமார் எண்ணூறு கோடி இலாபம் என்று வைத்துக் கொள்ளலாம்.
இதில் முப்பது விழுக்காடு என்றால் 240 கோடி, பதினைந்து விழுக்காடு என்றால் 120 கோடி.இவைதாம் கதாநாயகன் மற்றும் இயக்குநரின் சம்பளம் என்று சொல்லப்படுகிறது.
எல்லா பெரிய கதாநாயகர்களும் பெரிய இயக்குநர்களும் இந்த வழிமுறையையே கடைபிடித்தால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கும்.தயாரிப்பாளர்கள் பெருகுவர்,நிறையப் படங்கள் உருவாகும்.
இப்படி நடந்தால் இந்தத் துறை சார்ந்த அனைவருக்கும் நல்லது.











