சினிமா செய்திகள்

சிம்பு சுசீந்திரன் இணையும் படத்தைத் தயாரிக்கப்போவது யார்? விடை தெரிந்தது

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில் சிம்பு நடிக்கவிருக்கும் அடுத்த படத்துகான வேலைகள் வேகமாக நடக்கின்றன.

இயக்குநர் சுசீந்திரன் சொன்ன கதை சிம்புவுக்குப் பிடித்ததால் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப்படத்தைத் தயாரிக்கப் போவது யார்? என்கிற பெரிய கேள்வி இருந்தது.

இப்படத்தைத் தயாரிக்க ஓரிரு தயாரிப்பாளர்கள் முன்வந்த போதும், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.

இந்த நேரத்தில், சுசீந்திரனிடம் கதை கேட்டிருக்கிறார் டி.ராஜேந்தர். அவருக்கும் கதை பிடித்துப் போனதால் இந்தப்படத்தைத் தாமே தயாரிப்பதாகச் சொல்லிவிட்டாராம்.

இதனால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சிம்பு படத்தைத் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பின்பு தொடங்கும் என்றும் தொடங்கினால் ஒரே மூச்சில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிடத் திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் சுசீந்திரன்.

இப்படம் தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுகள் இப்போது நடந்துவருகிறதாம். அது முடிவடைந்தவுடன் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Related Posts