சினிமா செய்திகள்

நடிகர் சங்க ஆலோசனைக் கூட்டம் ஆச்சரியப்படுத்திய சிம்பு

திரைப்படங்களைத் திரையிடும் டிஜிட்டல் சேவை அமைப்புகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், மார்ச் 1,2018 தொடங்கி 48 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார்கள்.

இதனால், புதிய படங்கள் திரையிடப்படவில்லை. படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன.

வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமைச்சர்கள் முன்னிலையில் ஏப்ரல் 17 அன்று சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், தயாரிப்பாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி, எல்லா நடிகர்-நடிகைகளுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டு இருந்தது. சிம்பு, ஜீவா, பரத், அரவிந்தசாமி, விஜய்சேதுபதி உள்பட பலர் ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள்.

கமல்,ரஜினி,விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவில்லை.

நடிகர்-நடிகைகளின் சம்பளக் குறைப்புப் பற்றியும், அவர்களின் உதவியாளர்கள் சம்பளத்தை அந்தந்த நடிகர்-நடிகைகளே ஏற்றுக் கொள்வது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு முன்னுதாரணமாக நடிகர் சூர்யா தனது உதவியாளர்களின் சம்பளத்தை அவரே ஏற்றுக் கொண்டார். அவருக்குக் கூட்டத்தில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

உதவியாளர்கள் என்ற பெயரில், சில நடிகைகள் ஐந்து அல்லது ஆறு பேர்களை படப்பிடிப்புக்கு அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பது பற்றியும் எடுத்துக் கூறப்பட்டது. இதற்கு விரைவில் தீர்வு காண்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விஷால் அணிக்கு எதிராகவே தொடர்ந்து பேசிவரும் சிம்பு, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

Related Posts