சினிமா செய்திகள்

விஜய்யின் கரு படம் பெயர் மாறக் காரணம் இதுதான்

விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கரு’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

பெண்மையை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சாய் பல்லவியுடன், நாக சவுரியா, வெரோனிகா அரோரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படம், பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.

அதன்பின் பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியாகும் என்று சொன்னார்கள். அப்போதும் படம் வெளியாகவில்லை.

இப்போது இந்தப் படம் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்தப் படத்தின் பெயர் தியா என மாற்றப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

படம் இவ்வளவு முறை தள்ளிப்போனதற்கும் படத்தின் பெயர் மாறியதற்கும் காரணம்,

இந்தத் திரைப்படத்திற்கான ‘கரு’ பெயர் தனக்குச் சொந்தமானது என்றும் 2013 ம் ஆண்டு படத்தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து இருப்பதாகவும், ‘கரு’ என்ற படத்தை வெளியிட அனுமதி கூடாது என மணிமாறன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்தை வெளியிட தடை விதித்திருந்தார். இந்த தடை நீக்க கோரி லைக்கா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டது.

பிப்ரவரியில் நடந்த இந்த வழக்கின்போது, படத்தின் பெயரை மாற்றிக் கொள்வதாக லைகா நிறுவனம் கூறியது என்று சொல்லப்பட்டது.

அதை மெய்ப்பிக்கும் விதமாக இப்போது பெயர் மாற்றம் நடந்துள்ளது.

Related Posts