உலக அளவில் வாரிசு துணிவு கடும்போட்டி – என்ன நடக்கிறது?
2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம்.
வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு படத்தின் வெளிநாட்டு விலை 17 கோடி என்று சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக வாரிசு படத்தைத் திரையரங்குகளுக்குக் கொடுக்க அதிகத் தொகை கேட்கிறார்களாம். அதனால் திரையரங்குக்காரர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதைப் பயன்படுத்தி குறைந்த தொகையில் துணிவு படத்தைக் கொடுத்து அதிகத் திரையரங்குகளைப் பிடிக்கும் போட்டி நடக்கிறதாம்.
எடுத்துக்காட்டாக நார்வே போன்ற சின்ன நாடுகளை ஆறு திரையரங்குகள்தாம் இருக்கின்றன என்றால் அவற்றில் நான்கு அல்லது ஐந்து திரையரங்குகளை துணிவு படத்துக்காக ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் இருக்கிறார்களாம்.
துணிவு படத்தை வெளிநாடுகளில் லைகா நிறுவனம் வெளியிடுகிறது. அஜீத் நடிக்கும் அடுத்த படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.
எனவே, துணிவு படத்தை அதிகத் திரையரங்குகளில் வெளியிட மிகவும் ஆர்வமாக லைகா நிறுவனம் வேலை செய்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
படவெளியீட்டுக்கு இன்னும் ஐம்பது நாட்கள் இருப்பதால் அதற்குள் இதுபோன்ற பல செய்திகள் உலாவந்து கொண்டேயிருக்கும்.
ஐம்பதுநாட்களுக்குப் பிறகுதான் உண்மை நிலவரம் தெரியவரும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.











