சினிமா செய்திகள்

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரானார் உஷா ராஜேந்தர்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2020 நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் முரளி இராமநாராயணன் தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன. தேர்தல் முடிவில், முரளி இராமநாராயணன் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. டி.ராஜேந்தர் அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட மன்னன் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார் சொன்னார் டி.ராஜேந்தர். அது தொடர்பாகப் பதிவாளர் அலுவலகத்திலும் புகாரளித்துள்ளார்.

அதோடு நில்லாமல், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்கிற பெயரில் புதிய சங்கத்தைத் தொடங்கினார்.

டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா
டிசம்பர் 5,2020 அன்று நடைபெற்றது.

அப்போது சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாக..

தலைவர் – டி.ராஜேந்தர்
செயலாளர் – என்.சுபாஷ் சந்திர போஸ்
செயலாளர் – ஜேஎஸ்கே.சதிஷ் குமார்
பொருளாளர் – கே.ராஜன்
துணை தலைவர் – பி.டி.செல்வ குமார்
துணை தலைவர் – ஆர்.சிங்கார வடிவேலன்
இணை செயலாளர் -கே.ஜி.பாண்டியன்
இணை செயலாளர் – எம்.அசோக் சாம்ராஜ்
இணை செயலாளர் – சிகரம்.ஆர்.சந்திர சேகர்

ஆகியோரும், தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான திருமதி உஷா ராஜேந்தர், எஸ்டிஆர் பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்தச் சங்கத்தில் உறுப்பினராக இணைந்தனர் என்று அறிவிக்கப்பட்டது.

இப்படியொரு சங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அந்தச்சூழலில் அதிரடியாக, தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார் டி.ராஜேந்தர்.

அதன்காரணமாக, காலியான தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்கு டி.ராஜேந்தரின் மனைவி உஷாராஜேந்தர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.சங்கத்தின் கெளரவ ஆலோசகராக டி.ராஜேந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டி.ராஜேந்தரின் வீட்டிலேயே நடந்த பொறுப்பேற்கும் நிகழ்வில், தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.சதீஷ்குமார், பி.டி.செல்வகுமார், சிங்காரவடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts