ஜெயம்ரவியின் பூமி பட பேச்சுவார்த்தை தோல்வி – நடந்தது என்ன?
நல்ல வரவேற்பையும் பெரும் வசூலையும் பெற்ற’கோமாளி’படத்துக்கு அடுத்து ஜெயம்ரவி நடித்துள்ள படம் ‘பூமி’.அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருக்கும் இந்தப் படம் ஜெயம் ரவியின் 25 ஆவது படமாகும்.
லஷ்மண் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமி’ படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், சதீஷ் உள்ளிட்ட பலர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு டெட்லி ஒளிப்பதிவாளராகவும், இமான் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.
மே 1 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
இந்நிலையில், செப்டம்பர் 27 மாலை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ‘பூமி’ படத்தின் உரிமையைக் கைப்பற்றிவிட்டதாகத் தகவல் வெளியானது.
இதுகுறித்து விசாரித்தபோது, ஹாட்ஸ்டார் தளத்தில் பூமி படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம்.
பூமி படக்குழுவினர் நேரடியாக இணையத்தில் வெளியிட வேண்டும் என்றால் 45 கோடி விலை என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஹாட்ஸ்டார் தளத்தினர் அப்படத்தை இருபத்தைந்து கோடி ரூபாய்க்குக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். இதனால் உடன்பாடு எட்டப்படவில்லையாம்.
இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்ததை அறிந்தோர் படத்தை ஹாட்ஸ்டார் வாங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டனர். ஆனால் அதில் உண்மையில்லை, ஹாட்ஸ்டார் தளத்தில் விலை படியவில்லை. அதேசமயம் அமேசான்,நெட் ஃப்ளிக்ஸ் போன்ற தளங்களுடனும் பேச்சு நடக்கிறதாம்.
ஆனால்,இதுவரை எதுவும் உறுதியாகவில்லை என்கிறார்கள்.












