புதிய படம் அறிவித்தார் ஷங்கர் புதிய வழக்கு தொடர்ந்தது லைகா
கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படம் பல்வேறு சிக்கல்களால் இன்னும் நிறைவடையாமல் உள்ளது.
அதனால், இயக்குநர் ஷங்கர்,தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் 50 ஆவது படமாக அது உருவாகவிருக்கிறது. பெரும் பொருட்செலவில் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அந்தப் படத்தை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
இப்படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்க இயக்குநர் ஷங்கருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை அவர் வேறு படங்களை இயக்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் லைகா நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த மனு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு ஏப்ரல் 1 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இயக்குநர் ஷங்கரின் விளக்கத்தைக் கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, பிற படங்களை இயக்கக் கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14,2021) வெளியான செய்திகளில்,
இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கும் இந்திப் படமொன்றை ஷங்கர் இயக்குகிறார்.இந்தப் படம் தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அந்நியன்’ படத்தின் மொழிமாற்று என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் ஜெயந்திலால் காடா தயாரிக்கிறார்.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளதாவது:
அந்நியனை இந்தியில் ரீமேக் செய்யவேண்டுமென்றால் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற திறமையான, கவர்ந்திழுக்கக் கூடிய ஒருவர் தேவை. அது ரன்வீர் சிங்கிடம் இருப்பதை நான் கண்டுகொண்டேன். காரணம் தனது அற்புதமான நடிப்பின் மூலம் இரு பாத்திரங்களுக்கு உயிரூட்டக் கூடியவர் ரன்வீர். இந்தியா முழுவதும் உள்ள இரசிகர்களுக்காக ‘அந்நியன்’ படத்தை ரீமேக் செய்ய மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். இந்த சக்திவாய்ந்த கதை அனைவரது மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு ஷங்கர் கூறியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு மத்தியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
நேற்று இச்செய்திகள் வெளியான நிலையில், இன்று, இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தை முடிக்காமல் பிற படங்களை எடுக்க தடை விதிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதி தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.











