ஏஜெண்ட் கண்ணாயிரம் எப்படிப்பட்ட படம்? – இயக்குநர் விளக்கம்
2019 ஆம் ஆண்டு தெலுங்கில் ‘ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ என்ற திரைப்படம் வெளியானது. நவீன் பாலிஷெட்டி, ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப்படத்தின் கதைக்கருவை மையமாகக் கொண்டு தமிழில் உருவாக்கப்பட்டிருக்கும் படம்,ஏஜெண்ட் கண்ணாயிரம்.
இந்தப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ‘வஞ்சகர் உலகம்’ திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் நடிகை ரியா சுமன், ஸ்ருதி ஹரிஹரன், புகழ், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, ராம்தாஸ், இந்துமதி, மதன் தட்சிணாமூர்த்தி, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியானது.
அண்மையில், இந்தப் படத்தின் ‘ஒப்பாரி ரேப்’ என்ற பாடல் காணொலி வெளியானது.
இப்படம் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் மனோஜ்பீதா கூறியதாவது…..
இப்படம் தெலுங்கில் வெளியானபோது பார்த்தேன். பிடித்திருந்தது. அதனால் அப்படத்தின் மொழிமாற்று உரிமையை வாங்கி வைத்திருந்தேன். இந்தத் தகவல் தெரிந்து சந்தானம் சார் என்னைக் கூப்பிட்டு நாம் சேர்ந்து இந்தப்படத்தைச் செய்வோம் என்றார்.
தொடக்கத்திலிருந்தே இது வழக்கமான சந்தானம் சார் படம் மாதிரி இருக்கக்கூடாது என முடிவு செய்து அதுபோலவே படத்தை எடுத்திருக்கிறோம். அவருடைய பஞ்ச் வசனங்கள், கவுண்ட்டர் வசனங்கள் ஆகிய எதுவுமே இதில் இருக்காது. தொடக்கத்தில் இதைச் சந்தானம் சாரிடம் சொன்னபோது அவரிடம் சிறு தயக்கம் இருந்தது. இப்படி இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? எனக் கேட்டார். ஆனால் போகப்போக நான் சொன்னதை ஏற்றுக்கொண்டார்.
அதேசமயம்,இந்தப்படத்தின் கதைக்களம் சுவாரசியமானது என்பதாலும்.சந்தானத்தின் மிகவும் மாறுபட்ட நடிப்பினாலும் படம் மக்களுக்குப் பிடிக்கும்.
தெலுங்குப்படத்தில் இருக்கும் சில காட்சிகளைப் படமாக்கினால் வழக்கமான சந்தானம் சார் படமாகிவிடும் என்பதால் அவற்றைக் கூடத் தவிர்த்துவிட்டோம்.
படம் முழுமையாக முடிந்த பிறகு பார்த்த சந்தானம் சாருக்கும் திருப்தி.யுவன்ஷங்கர்ராஜாவின் இசை இந்தப்படத்துக்கு மிகவும் பலமாக அமைந்திருக்கிறது.
மக்கள் பார்த்துப் பழக்கப்பட்ட ஒரு விசயத்தை உடைத்து இன்னொன்றை வைத்து அவர்களை இரசிக்க வைக்கும் கடின முயற்சியைச் செய்திருக்கிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.











