திருமணம் குறித்து அசோக்செல்வன் வெளிப்படைப் பேச்சு
தமிழ்த் திரையுலகில் வளர்ந்து வரும் திறமை மிகு இளம் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைகளங்களைத் தேர்ந்தெடுத்து,வித்தியாசமான பாத்திரங்கள் மூலம் அசத்தி வரும் அசோக் செல்வன் தனெக்கென ஒரு தனி இரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். மேலும் விநியோகத் தளங்களில் அவரது படங்களுக்கு தனித்த மதிப்பு இருக்கிறது.
ஓ மை கடவுளே, மன்மத லீலை ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்கர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், தனது வெற்றிக்கு உடனிருந்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நவம்ப்ர் 10 அன்று ஊடக நண்பர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது….
நான் சினிமா பின்புலம் உள்ளவனோ பணக்காரனோ கிடையாது.மிடில்கிளாஸ் குடும்பத்திலிருந்து திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். சினிமாவுக்கு வரும் எல்லோருமே கஷ்டப்பட்டுத் தான் வருகிறார்கள்.அதைச் சொல்லிக்காட்ட விரும்பவில்லை. ஆனால் எனக்கு நீங்கள் தந்த ஆதரவும் அன்பும் மிகப்பெரியது. உங்களது விமர்சனங்களும் கருத்துகளும் தான் என்னைச் செதுக்கியது. என்னுடைய குரு நீங்கள் தான். உங்கள் கருத்துகளின் படிதான் என் ஒவ்வொரு படத்தையும் தீர்மானிக்கிறேன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்படியான படம் செய்ய வேண்டும்.அதுவே என் விருப்பம்.
ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்படித்தான் என் படங்களைத் தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று பாத்திரங்கள் என்று நினைத்துத் தான் செய்தேன். இப்போது அதற்கு வரும் பாராட்டுகள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்துள்ளது. அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறையப் படங்கள் செய்யவுள்ளேன்.
கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்துக் கதையில் என்னைப் பார்க்கலாம்.
எனக்கு இப்போதைக்கு கல்யாணப் பேச்சு இல்லை. ஆனால் வீட்டில் பார்த்து வைக்கும் திருமணம் என் குணத்திற்கு செட் ஆகாது. ஏனெனில் நான் வேலையில் மூழ்கிவிட்டால் யார் போனையும் எடுக்கமாட்டேன். இதுபோன்ற என் குணங்களைப் புரிந்துகொள்பவருடன் தான் சேர்ந்து வாழ முடியும்.
அடுத்ததாக சரத்குமார் சாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன்.அதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.அதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











