செய்திக் குறிப்புகள்

பீட்சா 4 படத்தில் நாயகனான அபிஹாசன் – சனவரியில் படப்பிடிப்பு

தமிழ்த் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதியபோக்கை ஏற்படுத்திய படம்’பீட்சா’.அப்பட வரிசையின் முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ தொடங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. 

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஆகியன இணைந்து தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபிஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறியதாவது…

‘பீட்சா’ முதல் மூன்று பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து அதன் நான்காம் பாகத்தையும் தயாரிப்பது மிக்க மகிழ்ச்சி. இரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து ‘பீட்சா’ வெற்றிப் பயணத்தை இப்படம் தக்க வைக்கும் என்று நம்புகிறேன்.பொங்கலுக்குப் பின்னர் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. 

‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘சூது கவ்வும் 2’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய
எஸ்.ஜே.அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. இதன் இயக்குநர், இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

‘பீட்சா 4’ திரைப்படத்தில் நடிப்பது குறித்து அபிஹாசன் கூறியதாவது…..

தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்களைச் சிறு வயது முதலே தெரியும், அவரது படத்தில் முதல் முறையாக நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தரமான கதைகளையும் திறமையுள்ள இளைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் அவர் ‘பீட்சா 4’ திரைப்படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்தது சந்தோசமாக உள்ளது.
‘பீட்சா’ முதல் மூன்று பாகங்களுக்கு நியாயம் செய்யும் வகையிலும், அதே சமயம் வழக்கமான திகில் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டும் இரசிகர்களுக்கு விறுவிறுப்பு விருந்து படைக்கும் வகையில் ‘பீட்சா 4’ இருக்கும். படப்பிடிப்பு தொடங்குவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Posts