வட்டாரவழக்கு – திரைப்பட விமர்சனம்
உணவு உடை இருப்பிடம் மற்றும் இருக்கும் கவுரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஓடிக்கொண்டிருக்கும் இப்போதைய தலைமுறைக்கு, பங்காளிச்சண்டை அதன் வைராக்கியம் அதனால் நடக்கும் கொலைகள் ஆகியன புதிதாக இருக்கும். அதைத்தர முயன்றிருக்கிறார் வட்டாரவழக்கு பட இயக்குநர் கண்ணுசாமி இராமச்சந்திரன். இதற்காக 1987 காலகட்டத்தையும் மதுரை மண்ணையும் கதைக்களமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ்நம்பிராஜன் கோபக்கார இளைஞனாகப் பொருந்திப்போகிறார். காதல் காட்சிகளிலும் அவர் குறைவைக்கவில்லை.
நாயகியாக நடித்திருக்கும் ரவீனாரவி, கிராமத்துப்பெண்ணின் துடுக்குத்தனம் மட்டுமின்றி ஆக்ரோசத்தையும் அழகாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.
வில்லனாக நடித்துள்ள விஜய்சத்யா மற்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் கிராமத்து மக்கள் ஆகியோர் இயல்பாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் சுரேஷ் மணியன் மற்றும் டோனி சான் ஆகியோர் அந்தக்காலகட்டத்தையும் அக்கால மனிதர்களையும் திரையில் கொண்டுவரக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசை வட்டாரவழக்குக்கு வளம். அதுவும் அவருடைய அந்தக்காலப் பாடல்களைப் பின்னணியில் ஒலிக்கவிட்டிருப்பது சுகம்.
கதையாகக் கேட்டால் சாதாரணமாகத் தெரியும் இக்கதைக்குள் கிராமத்து மனிதர்களின் அப்பழுக்கற்ற பாசம், நேசம், கோபம் ஆகியனவும் அவர்களுக்கிடையேயான கேலி கிண்டல் கலந்த உரையாடல்களும் இரசிக்க வைக்கின்றன.
சொந்தச்சாதிக்குள் இருக்கும் வர்க்க வேறுபாடுகளை மையப்படுத்தி அந்தக்காலத்தில் பல படங்கள் வந்திருக்கின்றன.இடையில் வெவ்வேறு சாதிகளுக்குள்ளான மோதல்கள் மேலெழும்பின. மீண்டும் பழையபடி ஒரேசாதிக்குள் நடக்கும் மோதல்களை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது கதை.
முதல்படத்திலேயே ஏதாவதொரு புதுமை செய்தாக வேண்டும் என நினைத்த இயக்குநர் பாராட்டுக்குரியவர்.
– குமரன்











