நந்திவர்மன் – திரைப்பட விமர்சனம்
சேர சோழ பாண்டிய மன்னர்களைப் பற்றிய கதைகள் கொண்ட திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப்படம் பல்லவமன்னர்காலத்தைக் காட்டும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. பல்லவமன்னர்களில் ஒருவரான நந்திவர்மன் கட்டிய கோயில் அதற்குள் புதைந்திருக்கும் புதையல், அதைத்தேடி வரும் குழு, அங்கு ஏற்படும் சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் விதம் ஆகியனதாம் இந்தப்படம்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் நாயகன் சுரேஷ்ரவி, வேடத்துக்கேற்ற மிடுக்குடன் உலாவருகிறார்.காதல் காட்சிகளிலும் இயல்பாக இருக்கிறார்.
நாயகி ஆஷாவெங்கடேஷ் எளிய அழகு.காதல் மட்டுமின்றி கடினமான காட்சிகளின் உணர்வுகளையும் முகபாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொல்லியல் பேராசிரியர் நிழல்கள்ரவி, தொல்லியல் அதிகாரி போஸ்வெங்கட் உள்ளிட்டோர் கதையைச் சொல்பவர்களாகவும் நகர்த்துபவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆடுகளம் முருகதாஸ், அம்பானி சங்கர், கோதண்டம் உள்ளிட்டோரும் பொருத்தமாக அமைந்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர்.சேயோன்முத்து, பழங்காலம் தற்காலம் ஆகியனவற்றை வேறுபடுத்திக் காட்ட உழைத்திருக்கிறார்.
ஜெரால்டுஃபிலிக்ஸ் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசையிலும் குறைவில்லை.
சண்டைப்பயிற்சி இயக்குநர் சுகேஷ் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் நாயகனுக்கும் படத்துக்கும் பலம்.
பல்லவர் காலம் என்பதால் கலை இயக்குநருக்கு வேலை அதிகம்.அதை உணர்ந்து அதற்கேற்ப கோயில் உள்ளிட்ட அரங்குகளை அமைத்திருக்கிறார் முனிகிருஷ்ணன்.
அறிமுக இயக்குநர் பெருமாள்வரதன், இன்னமும் சொல்லப்படாத தமிழ்நாட்டு வரலாற்றைச் சொல்ல வேண்டுமென முனைந்திருக்கிறார். பழகிய கதை என்றாலும் சொல்லப்படும் காலகட்டமும் அதன் சிறப்பம்சங்களும் படத்தைப் புதிதாக்குகின்றன.எழுத்தில் உள்ள வலிமையைக் காட்சிகளிலும் கடத்தியிருப்பது அவரது சிறப்பு.
– இளையவன்














