தவம் – திரைப்பட விமர்சனம்
சென்னை மாநகரத்தில் நன்றாகப் படித்து நல்ல வேலையில் இருக்கும் கதாநாயகி பூஜாஸ்ரீ, தன்னைப் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஏதாவதொரு காரணம் சொல்லி தவிர்த்து வருகிறார்.
அதற்குக் காரணம் ஒரு கிராமத்து இளைஞனான நாயகன் வசி. அவர் மீதான அதீத காதல் காரணமாகவே நாயகி திருமணத்தைத் தவிர்க்கிறார்.
இந்தக்காதல் கதையோடு விளை நிலங்களைக் கையகப்படுத்தி நாசகாரத் தொழிற்சாலைகள் அமைப்பதை எதிர்த்துப் போராடும் சமூக வாத்தியார் சீமானின் கதையும் சேர்ந்ததுதான் தவம்.
நாயகன் வசி, கதாநாயகனுக்குரிய எல்லா அம்சங்களோடும் இருக்கிறார். சண்டை மற்றும் நடனக்காட்சிகளில் பொருத்தமாக நடித்திருக்கிறார்.
நாயகி பூஜாஸ்ரீ, தொடக்கத்திலிருந்தே நடிப்போடு முகம் சுளிக்கா வண்ணம் உடலழகையும் காட்டியிருக்கிறார்.
நகைச்சுவைக்கு பிளாக்பாண்டி, சிங்கம்புலி, தெனாலி, வெங்கல்ராவ் எனப்பலர் இருந்தும் ரொம்பப் பலவீனமாக இருக்கிறது.
நடேசன் வாத்தியார் பாத்திரத்தில் வருகிற சீமான், படத்துக்குப் பலமாக இருக்கிறார்.அவர் வருகிற காட்சிகள் வேகமாகப் போகின்றன. சமுதாய அக்கறையோடு அவர் பேசும் வசனங்கள் வரவேற்புக்குரியவை.
அவருடைய நண்பராக நடித்திருக்கும் ஐகோ, மேகங்களை விரட்டிக் கொண்டு ஓடும் காட்சி, விவசாயிகளின் ஏக்கங்களைக் கண்முன் நிறுத்தி கண்களைக் கசிய வைக்கிறது.
படத்தின் இயக்குநர்கள் விஜயானந்த் சூரியன் ஆகிய இருவரும் படம் முழுக்க வருகிற வேடங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகன் வசியின் மாமாவாக சூர்யனும், வில்லன் சிவண்ணாவாக விஜயானந்தும் நடித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் தாழ்வில்லை.
வேல்முருகனின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான அளவு இருக்கிறது.
நல்ல கதைக்களம் என்றாலும் திரைக்கதையில் பலவீனமாக இருக்கிறது. காட்சிகள் நகர மாட்டேனென்கின்றன.
இறுதிக்காட்சியில் பெரிய கதாநாயகன்கள் அளவுக்கு புதுநாயகனான வசிக்கு சண்டைக்காட்சிகள் அமைத்திருப்பது அலுப்பாக இருக்கிறது.
கட்டக் கடைசியில் காட்டப்படுகிற திருப்பம் புதியது. இன்றைய காலகட்டத்தில் நம்பும்படி இருக்காதெனினும் முன்னொரு கால்த்தில் சூப்பர் ஹிட் படங்களின் கருவாக இருந்ததே இந்தத் தவம்.











